மாணவர்களின் பறக்கும் கனவினை நிறைவேற்ற நாளை சிறப்பு விமான பயணத்திற்கு ஏற்பாடு
மாணவர்களின் பறக்கும் கனவினை நிறைவேற்ற நாளை சிறப்பு விமான பயணத்திற்கு ஏற்பாடு
ADDED : செப் 20, 2026 05:13 PM
புதுச்சேரி: மாணவர்களின் பறக்கும் கனவினை நிறைவேற்றும் வகையில், நாளை சிறப்பு விமான பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள்–167 மற்றும் புதுச்சேரி ஹெரிடேஜ் லேடீஸ் சர்க்கிள்–187 அமைப்புகள் இணைந்து, மாணவர்களின் கனவுகளுக்குச் சிறகளிக்கும் விதமாக பிளைட் ஆப் பேண்டசி என்ற சிறப்புப் பயணத் திட்டத்தை முதன்முறையாகத் தொடங்கவுள்ளன.
பிரகாசமான நாளைக்கான சிறகுகள் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பயணம், நாளை 22 ம்தேதி நடக்கிறது. அரசு உதவிபெறும் பாத்திமா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் இதில் பயணிக்கின்றனர்.
சென்னையிலிருந்து புறப்பட்டு, பெங்களூரு வழியாகப் புதுச்சேரியை அடையும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இருவழிப் பயணமாக மொத்தம் 555 வான்வழி கிலோமீட்டர்கள் கடக்கப்பட உள்ளன.
இந்த முயற்சியை ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகளின் நிர்வாகிகள் ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.
இது குறித்து ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘ஒவ்வொரு குழந்தையும் சாத்தியக்கூறுகள் நிறைந்த உலகிற்குத் தகுதியானவர்கள் என்ற கொள்கையின் அடிப்படையில், மாணவர்களுக்குப் புதிய பார்வைகள், நீடித்த நட்புகள், தன்னம்பிக்கை மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
முதன்முறையாக விமானத்தில் பறக்கவுள்ள பள்ளி மாணவர்களிடையே இது மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
