துாய்மை பணியாளர்களுக்கான சம்பள உயர்வை உடனே நிறைவேற்ற கோரிக்கை
துாய்மை பணியாளர்களுக்கான சம்பள உயர்வை உடனே நிறைவேற்ற கோரிக்கை
UPDATED : அக் 28, 2026 04:14 AM
ADDED : அக் 27, 2026 09:07 PM

புதுச்சேரி: துாய்மை பணியாளர்களுக்கு அறிவித்த சம்பள உயர்வு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தி.மு.க., அமைப்பாளர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த மாதம் கம்பன் கலையரங்கில் நடந்த துாய்மைப் பணி மாநாட்டில் கவர்னர் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி, ஜூன் மாதம் முதல் துாய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த சம்பள உயர்வு 4 மாதம் கடந்த நிலையில், நகர் பகுதியில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு தவிர வேறு எந்த பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் சென்று சேரவில்லை.
அத்துடன் மாதம், மாதம் துாய்மைப் பணிக்கான நிதி காலத்தோடு ஒப்பந்ததாரர்களுக்கு சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்வதால், அவர்களுக்கு மாத சம்பளம் வழங்குவதும் தாமதமாகி வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்கள் போனசை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரசு நிதி அளிக்காததால் போனஸ் கிடைக்குமா என்ற சந்தேகம் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கடைநிலை ஊழியர்களான துப்புரவு பணியை மேற்கொண்டு வரும் தொழிலாளர்களுக்கு நிதியை காலத்தோடு வழங்காமல் தட்டிக்கழிப்பதன் காரணம் என்ன.
பெருகிவரும் சுற்றுலா வளர்ச்சியின் காரணமாக துாய்மைப் பணி நாளுக்கு நாள் அதிகரித்து, தொழிலாளர்கள் இரவு, பகலாக தங்கள் கடின உழைப்பை செலுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான நிதியை காலத்தோடு அளிக்காமலும், உயர்த்திய சம்பளத்தை அனைவருக்கும் கொடுக்காமலும் அரசு மெத்தனம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
ஆகையால், முதல்வர் துாய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
