ADDED : செப் 13, 2026 07:14 PM
திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள்குப்பம், புதுச்சேரியில் அதிகளவு மக்கள் வசிக்கும் கிராமங்களில் ஒன்றாக உள்ளது. புதுச்சேரியில் குறைந்தது, 400 முதல் அதிகபட்சம் 700 அட்டைதாரர்களுக்கு ஒரு ரேஷன் கடை என்ற அளவில் செயல்பட்டு வருகிறது.
ஆனால் கலிதீர்த்தாள்குப்பத்தில் 1560 ரேஷன் அட்டைகள் உள்ள குடும்பங்களுக்கு ஒரே ரேஷன் கடை மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் டிஜிட்டல் முறையில் நாள் ஒன்றுக்கு 30, 40 குடும்பத்தினர் மட்டுமே மளிகை பொருட்கள் வாங்க முடிகிறது.
நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட மக்கள் ரேஷன் கடைக்கு வந்த போதிலும் பல மணி நேரம் காத்திருந்தும் பொருட்கள் வாங்க முடியால் திரும்ப செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது. எனவே கலிதீர்த்தாள்குப்பம் ரேஷன் கடையை, 780 அட்டைதாரர்களுக்கு ஒரு கடை என்ற அடிப்படையில் இரண்டு கடைகளாக பிரித்து பயன்பாட்டிற்குகொண்டு வர புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துளளனர்..
