பழைய நியூடோன் தியேட்டர் மதில் சுவர் இடித்து அகற்றம்
பழைய நியூடோன் தியேட்டர் மதில் சுவர் இடித்து அகற்றம்
ADDED : அக் 22, 2026 05:49 PM

புதுச்சேரி: அண்ணா சிலை சதுக்கம் அருகே பழுதடைந்த நிலையில் இருந்த நியூடோன் தியேட்டரின் மதில் சுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி ஊழியர்கள் இன்று (அக்.,22) இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, மேட்டுப்பாளையம் டிரக் டர்மினில் அருகே கடந்த ஆக். 6ம் தேதி, கன மழை காரணமாக தனியார் நிறுவன கட்டடத்தின் 15 அடி உயர மதில் சுவர் இடிந்து, சாலையோரம் தள்ளுவண்டியில் உணவு வியாபாரம் செய்தவர்கள் மீது விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய 82 வயது முதியவர் இறந்தார். 2 பெண்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புதுச்சேரி முழுதும் பாதுகாப்பற்ற முறையில் உள்ள கட்டடங்கள் குறித்து வருவாய்த்துறை, நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பருவ மழைக்கு முன்னதாக பாதுகாப்பற்ற முறையில் உள்ள கட்டடம், மதில் சுவர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரி, அண்ணா சிலை சதுக்கம் அருகே மறைமலையடிகள் சாலையோரம், பழைய நியூடோன் தியேட்டரின் ஆபத்தான நிலையில் இருந்த 25 அடி உயர மதில் சுவரை புதுச்சேரி நகராட்சி நிர்வாகம் பொக்லைன் இயந்திரம் மூலம் ஊழியர்கள் உதவியுடன் அதன் மீது இருந்த மரங்களை வெட்டி அகற்றி, பழுதடைந்த மதில் சுவரை இடித்து அகற்றும் பணியில் இன்று ஈடுபட்டனர்.
இதேபோல் ஆபத்தான கட்டடம், மதில் சுவர்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் புகார் அளித்தால், உடனடியாக ஆய்வு செய்து இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
