உரம் எடுக்க புதிய நடைமுறை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
உரம் எடுக்க புதிய நடைமுறை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
UPDATED : அக் 07, 2026 09:31 PM
ADDED : அக் 07, 2026 07:26 PM

திருபுவனை: புதுச்சேரி விவசாயிகள் உரம் எடுக்க வேளாண்துறை கொண்டு வந்துள்ள புதிய நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி மதகடிப்பட்டு உழவர் உதவியகம் முன், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், விவசாயிகள் பயன்படுத்துகின்ற உரம் சம்பந்தமாக புதிய கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
புதுச்சேரியில் வெகுவாக குறைந்து வரும் விவசாயிகள் மற்றும் சாகுபடி பரப்பளவு வேலையாட்கள் பற்றாக்குறை இவற்றால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை ஏற்கனவே வேளாண் நலத்துறை மூலம் அக்ரி சாட்டில் பதிவு செய்துள்ளனர்.
இதை மேலும் ஸ்மார்ட் போன் மூலமாக பதிவு செய்து பல மணி நேரம் காத்திருந்து உரம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்தும், புதிய நடைமுறையை ரத்து செய்து பழைய முறையில் உரத்தை விவசாயிகள் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதகடிப்பட்டு உழவர் உதவியக அலுவலகம் முன், புதுச்சேரி விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு பொதுச்செயலாளர் ரவி தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.
இது குறித்து உழவர் உதவியக அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
