ADDED : செப் 08, 2026 04:50 PM
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஆட்டோ வாகன பிரசாரம் நேற்று நடந்தது.
வாகன பிரசாரத்தை சுகாதார நிலையத்தின் மருத்துவ அதிகாரி சரண்யா துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர், சுகாதார உதவியாளர்கள், கிராம செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அய்யங்குட்டி பாளையம், தர்மபுரி, முத்திரையார்பாளையம், காந்தி திருநல்லுார், வி.பி. சிங் நகர், மாணிக்க செட்டியார் நகர், சொக்கநாதன்பேட், தட்சிணாமூர்த்தி நகர், திலாஸ்பேட், காந்தி நகர், கவுண்டம்பாளையம் மற்றும் திலகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
பிரசாரத்தின் போது, டெங்கு காய்ச்சல் தடுப்பு, கொசு உற்பத்தியைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் சுற்றுப்புறத் துாய்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் டயர்கள், தேங்காய் ஓடுகள், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்களில் நீர் தேங்காமல் அகற்றுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
