/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென்பெண்ணையாற்றில் 44.67 டி.எம்.சி., நீர் தர மறுப்பு; தமிழக அரசு மீது வழக்கு தொடர புதுச்சேரி அரசு முடிவு சட்டசபையில் அனல் பறக்கும் விவாதம்
/
தென்பெண்ணையாற்றில் 44.67 டி.எம்.சி., நீர் தர மறுப்பு; தமிழக அரசு மீது வழக்கு தொடர புதுச்சேரி அரசு முடிவு சட்டசபையில் அனல் பறக்கும் விவாதம்
தென்பெண்ணையாற்றில் 44.67 டி.எம்.சி., நீர் தர மறுப்பு; தமிழக அரசு மீது வழக்கு தொடர புதுச்சேரி அரசு முடிவு சட்டசபையில் அனல் பறக்கும் விவாதம்
தென்பெண்ணையாற்றில் 44.67 டி.எம்.சி., நீர் தர மறுப்பு; தமிழக அரசு மீது வழக்கு தொடர புதுச்சேரி அரசு முடிவு சட்டசபையில் அனல் பறக்கும் விவாதம்
ADDED : மார் 25, 2025 07:38 AM
புதுச்சேரி; ஒப்பந்தப்படி, தென்பெண்ணையாற்று நீரை புதுச்சேரிக்கு தர மறுத்துள்ள தமிழக அரசு மீது வழக்கு தொடர புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
தென்பெண்ணையாற்றின் தண்ணீர் பங்கீட்டிற்காக, 1910ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்காக பிரெஞ்சு அரசும் ஆங்கிலேய அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டன.
பின், இந்த ஒப்பந்தம், 2007ல் புதுச்சேரி - தமிழக அரசுக்கு இடையே புதுப்பிக்கப்பட்டது. இந்த தண்ணீரை நம்பி புதுச்சேரியில் 4776 ஏக்கர் நிலமும், தமிழ்நாட்டில் 1275.11 ஏக்கர் நிலமும் உள்ளன.
இந்த ஒப்பந்தப்படி, தமிழ்நாடு அரசு புதுச்சேரிக்கு ஆண்டுதோறும் 44.67 டி.எம்.சி., நீர் திறந்துவிட வேண்டும்.
ஒப்பந்தப்படி சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து 9 மாதத்திற்கு புதுச்சேரி ஆயக்கட்டு பகுதிகள் தண்ணீர் பெற வேண்டும். ஆனால் புதுச்சேரி பகுதிக்கு 2 மாதம் வரைதான் தண்ணீர் கிடைக்கின்றது. அதுவும் பருவமழை பெய்யும் நவம்பர், டிசம்பரில் தான் பங்காரு வாய்க்கால் வழியாக சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வருகிறது.
தற்போது, குடிநீர் தேவைக்காக புதுச்சேரி அரசு தண்ணீர் கேட்டபோது தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் நேற்று புதுச்சேரி சட்டசபையின் கேள்வி நேரத்தின்போது பூதாகரமாக வெடித்தது.
அசோக்பாபு (பா.ஜ.,): புதுச்சேரி -தமிழ்நாடு மாநிலத்திற்கு இடையே நீர் பகிர்வு ஒப்பந்த திட்டம் எந்த நிலையில் உள்ளது? தமிழ்நாடு தற்போது எவ்வளவு நீர் வழங்குகிறது.
பொதுப்பணி துறை அமைச்சர் லட்சுமிநாரயணன்: கடந்த 2007ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட தென் பெண்ணையாறு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. தமிழக அரசு எந்தவித அளவும் நிர்ணயிக்காமல், சாத்தனுார் அணை முழுமையாக நிரம்பும் போது உபரி நீரை திறந்து விடுகிறது. இந்த தண்ணீர் சொர்ணாவூர் வழியாக பாகூர் ஏரியில் சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதம், எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது. இதன்படி ஆண்டுக்கு 44.67 டி.எம்.சி., நீர் புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டும். இந்த அளவு, சாத்தனுார் அணைக்கு வரும் நீர் வரத்தை பொறுத்து மாறுபடுகின்றது.
தற்போது புதுச்சேரி அரசு வேண்டுகோள் விடுத்தும் தமிழக அரசு தண்ணீர் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி அரசு மத்திய நீர்வளத் துறைக்கு கடிதம் மூலம் புகார் தெரிவித்துள்ளது.
அசோக்பாபு: இது புதுச்சேரி விவசாயிகளின் முக்கிய வாழ்வாதார பிரச்னை. ஒப்பந்தப்படி தண்ணீரை பெற வேண்டியது நம் உரிமை. அதை கேட்டுப்பெற வேண்டிய கடமை புதுச்சேரி அரசுக்கு உள்ளது. தண்ணீர் தராதது குறித்து நீர் மேலாண்மை ஆணையத்தில் அரசு புகார் செய்ய வேண்டும்
அமைச்சர் லட்சுமிநாராயணன்: மத்திய நீர் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம். அவர்கள் நீர் பங்கீடு தொடர்பான கூட்டத்துக்கு தமிழக அரசுக்கு அழைப்பு விடுத்தனர்.
தமிழக அரசு புறக்கணித்ததால் கூட்டம் ரத்தானது. 2007ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் 2067 வரை உள்ளது. இந்த ஒப்பந்தப்படி கிடைக்கும் நீர் மூலம் 6 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பாசனம், குடிநீர் வசதி பெறும். இதனால் மத்திய அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். புதுச்சேரி அரசின் புகாரின் அடிப்படையில் மத்திய நீர் ஆணையம் தமிழகத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இதில் அரசியல் ஏதும் கிடையாது. இது நம்முடைய உரிமை பிரச்னை. அனைத்து கட்சிகள் ஒத்துழைப்புடன் புதுச்சேரியின் உரிமை குரலை எழுப்புவோம். சட்ட நடவடிக்கை எடுத்து புதுச்சேரிக்கு உரிய நீரை தமிழக அரசிடம் பெறுவோம். இவ்வாறு விவாதம் நடந்தது.