தர்மபுரி சிறுமி பலாத்காரம் :புதுச்சேரி வாலிபர் கைது
தர்மபுரி சிறுமி பலாத்காரம் :புதுச்சேரி வாலிபர் கைது
UPDATED : அக் 10, 2026 09:44 PM
ADDED : அக் 10, 2026 09:37 PM
புதுச்சேரி: தர்மபுரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த புதுச்சேரியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜசேகர்,28; ஓட்டல் தொழிலாளியான இவருக்கும், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ் 2 மாணவிக்கும் இன்ஸ்டகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜசேகர், இந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி புதுச்சேரிக்கு அழைத்துள்ளார்.
அதனை நம்பிய மாணவி அவரது வீட்டிற்கு தெரியாமல், பஸ் மூலம் புதுச்சேரிக்கு வந்துள்ளார். பின் ராஜசேகருடன் தனியாக வீடு எடுத்து ஒன்றாக வசித்துள்ளார். அப்போது, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மகள் மாயமானது குறித்து, மாணவியின் தந்தை பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் மாணவி புதுச்சேரியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி வந்த பாலகோடு போலீசார் மாணவியை மீட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் ராஜசேகரை கைது செய்தனர்.
