ADDED : அக் 20, 2026 06:14 PM
குட்டீஸ்களுக்கு குதுாகல பரிசுகள்: தினமலர் அரிச்சுவடி ஆரம்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற 2.5 வயது முதல் 3.5 வயது வரையிலான மழலைகளுக்கு, கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அழகிய புத்தகப்பை, உணவு சாப்பிடுவதற்கான லஞ்ச்பாக்ஸ், விளையாடி மகிழ பிளாஸ்டிக் காய்கறித் தொகுப்பு, நீர் குமிழிகளை பறக்கவிட பப்பல்ஸ் எனப் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்விப் பயணத்தைத் தொடங்கிய முதல் நாளிலேயே தங்களுக்குப் பிடித்தமான பரிசுப் பொருட்கள் கிடைத்ததால், குழந்தைகள் உற்சாகத்தில் திளைத்தனர். புத்தகப்பைகளையும் விளையாட்டுப் பொருட்களையும் ஆர்வத்துடன் வாங்கிக்கொண்ட மழலைகளின் முகங்களில் மகிழ்ச்சி ததும்பியது.
சூப்பர் ருசிபால் பலுான்கள்... சூப்பர் உற்சாகம்..
அரிச்சுவடியைத் தொடங்கிய குழந்தைகளுக்கு, தினமலர் நாளிதழ் மற்றும் வின்னர் டெய்ரி நிறுவனத்தின் சூப்பர் ருசிபால் பலூன்கள் வழங்கப்பட்டன. வண்ணமயமான பலூன்களைக் கையில் பெற்றதும், மழலைகளின் உற்சாகம் இரட்டிப்பானது. பலுான்களை உயரத் துாக்கி வீசியும், அங்கும் இங்கும் ஆட்டியும் குழந்தைகள் குதுாகலித்தனர். சில மழலைகள் பலூன்களுக்குப் பின்னால் முகத்தை மறைத்துக்கொண்டு, திடீரென எட்டிப் பார்த்து பெற்றோருடன் கண்ணாமூச்சி விளையாடின. அவர்களின் குறும்புகளும் மழலைச் சிரிப்பும் சுற்றியிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்த பெற்றோர், அவர்களின் சேட்டைகளைக் கண்டு பூரித்தனர்.
பலுான்களுடன் குழந்தைகள் விளையாடிய அழகிய தருணங்கள், பெற்றோரின் மனங்களில் இனிய நினைவுகளாகப் பதிந்தன.
கையில் பரிசுப் பொருட்கள்... முகத்தில் புன்னகை...
கையில் பரிசுப் பொருட்கள், மறுகையில் பலூன்கள் என மழலைகள் அங்கும் இங்கும் உற்சாகமாக உலா வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. சில குழந்தைகள் பெற்றோரின் கரங்களைப் பற்றிக்கொண்டு மெல்ல நடந்தன. இன்னும் சில குழந்தைகளோ தங்களுக்குக் கிடைத்த பரிசுகளைக் காட்டியபடி மகிழ்ச்சியில் திளைத்தன. குழந்தைகளின் மழலை முகங்களையும் குறும்புத்தனமான அசைவுகளையும் ரசித்த பெற்றோர், அந்த அழகிய தருணங்களைத் தங்களது மொபைல்போனில் புகைப்படங்களாகவும் காணொலிகளாகவும் பதிவு செய்தனர். பின்னர், அவற்றை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி மகிழ்ந்ததுடன், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துகொண்டனர். குழந்தைகளின் முதல் கல்வி நிகழ்ச்சியின் நினைவுகளைப் பகிர்ந்து, உறவினர்களின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று மகிழ்ந்தனர். மழலைகளின் சிரிப்பும், பெற்றோரின் பூரிப்பும், பரிசுப் பொருட்களுடன் அவர்கள் காட்டிய குறும்புகளும் நிகழ்ச்சிக்கு மேலும் அழகு சேர்த்தன.
சுடச்சுட காலை உணவு: வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் அவர்களுடன் வந்த பெற்றோருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. பொங்கல், பூரி, இட்லி, கேசரி, வடை எனப் பல்வேறு உணவு வகைகள் சுடச்சுடப் பரிமாறப்பட்டன. அதிகாலையிலேயே குழந்தைகளுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெற்றோர், காலை உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிட்டனர்.
மழலைகளின் கல்விப் பயணத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியுடன், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்குக் காலை உணவும் வழங்கப்பட்டது பங்கேற்பாளர்களுக்கு மகிழ்ச்சியளித்தது.
பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம்: வித்யாரம்பம் நிகழ்ச்சி நிறைவடைந்ததும், பல பெற்றோர் தங்களது குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். குழந்தைகளின் கல்விப் பயணத்தைத் தொடங்குவதற்கு ஏற்ற பள்ளியைத் தேர்வு செய்யும் ஆர்வத்துடன், பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று சேர்க்கை தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தனர். பள்ளிகளின் சேர்க்கை நடைமுறைகள், குழந்தைகளைச் சேர்ப்பதற்கான விவரங்கள் உள்ளிட்ட தகவல்களைப் பெற்றுக்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, பெற்றோர் தங்களது குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கவும் செய்தனர். அரிச்சுவடி எழுதியதுடன் குழந்தைகளின் கல்விப் பயணத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியிலும் பெற்றோர் ஆர்வம் காட்டினர்.
மழலைகளுக்கு சான்றிதழ்: வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு, சிறப்பு விருந்தினர்களுடன் அவர்களது புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்விப் பயணத்தின் முதல் நாளை நினைவுகூரும் வகையில் அமைந்த இந்தச் சான்றிதழ்களைப் பெற்றோர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.
சான்றிதழ் கிடைக்கவில்லையா...
அப்ப...இங்க வந்துடுங்க..
மழை காரணமாக நிகழ்ச்சியில் சான்றிதழ் பெறாமல் விடுபட்ட குழந்தைகளுக்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, விடுபட்ட குழந்தைகளுக்கான சான்றிதழ்களை லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
