காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவர்கள் நேரடி பயிற்சி
காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவர்கள் நேரடி பயிற்சி
UPDATED : நவ 10, 2026 10:27 AM
ADDED : நவ 10, 2026 10:25 AM

புதுச்சேரி: காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவர்கள், கரையாம்புத்துார் விவசாயிகளுக்கு நெல் வேர் நனைத்தல் தொடர்பாக செயல்விளக்கம் அளித்தனர்.
காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு அரசு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ், கரையாம்புத்துார் பகுதியில் களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கரையாம்புத்துார் வேளாண் அலுவலர் வினோத் கண்ணன் வழிகாட்டுதலின் படி, மாணவர்கள் தமிழ்க்குடிமகன், ராஜேஷ், சஞ்சய், சிவானந்தம், சத்தியபாலன், அஷ்வின் குமார், ஆகாஷ், தணிகை மற்றும் விஷால் ஆகியோர் இணைந்து விவசாயிகளுக்கு நெல் பயிரில் வேர் நனைத்தல் குறித்த நேரடி செயல்விளக்க நிகழ்ச்சியை விவசாயியின் விளைநிலத்தில் ஏற்பாடு செய்து நடத்தினர்.
நிகழ்ச்சியில், நாற்றுக்களை நடுவதற்கு முன் உயிர் உரங்கள் அடங்கிய கலவையில் வேர்களை நனைத்து நடுதல் முறையை மாணவர்கள் செயல்முறையாக செய்து காட்டினர். இதன் மூலம், ஆரம்ப கால வேர் வளர்ச்சி ஊக்கமடைவதுடன், பயிர்கள் நோய் மற்றும் பூச்சித் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்பட்டு அதிக துார் வெடிக்கும் திறன் பெறும் என விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள், விவசாயிகளுடன் இணைந்து வயலில் இறங்கி நாற்று நடும் பணியிலும், இயந்திர நடுவு முறையிலும் நேரடியாகப் பங்கேற்று கள அனுபவம் பெற்றனர்.
