கோரிமேடு சோதனை சாவடியில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
கோரிமேடு சோதனை சாவடியில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
ADDED : மார் 26, 2026 08:41 PM
புதுச்சேரி: கோரிமேடு சோதனை சாவடியை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, புதுச்சேரி முழுதும் தேர்தல் துறை, காவல்துறை, கலால்துறை இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், நேற்று முன்தினம் நள்ளிரவு கோரிமேட்டில் உள்ள சோதனை சாவடியை ஆய்வு செய்தார்.
அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு அவர், ஊழியர்கள் அனைவரும் பணியில் இருக்கிறார்களா என்பது குறித்தும் கேட்டறிந்தார். அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு சில வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கினார்.
பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல், சோதனையில் ஈடுபட வேண்டும். அரசு ஊழியர்களுக்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனைவரும் கவனமுடன் பணியாற்றிட வேண்டும்.
வாகன சோதனையின் போது தகுந்த பாதுகாவலர்களுடன் வீடியோ எடுத்துக் கொண்டு சோதனை செய்ய வேண்டும். விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கண்டெடுப்பின், தேர்தல் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்' என்றார்.
