/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
/
மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ADDED : ஜூலை 18, 2025 12:25 AM

புதுச்சேரி: மத்திய அரசின் பிரதம மந்திரியின் மாதிரி கிராமம் திட்டத்தின் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நேற்று நடந்தது.
மத்திய அரசின் முழு பங்களிப்புடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 'பிரதம மந்திரியின் மாதிரி கிராமம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கிருமாம்பாக்கம், சேலியமேடு, பரிக்கல்பட்டு, இருளன்சந்தை, மணமேடு, பனையடிகுப்பம், டி.என்.பாளையம், அபிேஷகப்பாக்கம், ஊசுடு, சுத்துக்கேணி ஆகிய 10 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
திட்டத்தை செயல்படுத்த மாநில, மாவட்ட மற்றும் கிராமப்புற அளவில் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, கிராம வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 'பிரதம மந்திரியின் மாதிரி கிராமம்' திட்டத்தின் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். நலத்துறை இயக்குநர் இளங்கோவன், சப் கலெக்டர் இஷிதா ரதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், டி.என்.பாளையம் மற்றும் அபிேஷகப்பாக்கம் ஆகிய கிராமங்களின் கிராம வளர்ச்சி திட்டம் சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து, திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் குலோத்துங்கன், மாவட்ட குழுவினருக்கு விளக்கிக் கூறினார்.
மேலும், சமர்ப்பிக்கபட்ட இரு கிராமத்திற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததோடு, மீதமுள்ள 8 கிராமத்திற்கு ஒரு மாத காலத்திற்குள் கிராம வளர்ச்சி திட்டத்தை இறுதி செய்து சமர்பிக்குமாறு அந்தந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களுக்கு உத்தரவிட்டார்.
ஏற்பாடுகளை துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் லெபாஸ் செய்திருந்தார். கூட்டத்தில், குழு உறுப்பினர்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் மற்றும் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

