/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திஷா கமிட்டி கூட்டத்தில் இருந்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
/
திஷா கமிட்டி கூட்டத்தில் இருந்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
திஷா கமிட்டி கூட்டத்தில் இருந்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
திஷா கமிட்டி கூட்டத்தில் இருந்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
ADDED : ஜூலை 17, 2025 01:13 AM
புதுச்சேரி : தலைமைச் செயலாளர், துறை அதிகாரிகள் வராததை கண்டித்து திஷா கமிட்டி கூட்டத்தில் இருந்து தி.மு.க., எம்.எல்.ஏ., வெளிநடப்பு செய்தனர்.
மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரியில் நடக்கும் திஷா திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
திஷா கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், செல்வகணபதி எம்.பி., கலெக்டர் குலோத்துங்கன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தி.மு.க., எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, சம்பத், காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன், என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நில அளவை பதிவேடுகள் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், நகர மற்றும் கிராம திட்டமிடல் துறை ஆகிய ஐந்து துறைகளில் மத்திய அரசின் நிதியுதவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது தலைமைச் செயலாளர் சரத் சவுகான் வரவில்லை. அவருக்கு அழைப்பு விட்டீர்களா என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா கேட்டதற்கு பதில் தரவில்லை.
ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியை திருப்பி அனுப்பியது, கழிவறை பணிகள் மோசமாக நடந்தது என, வரிசையாக தி.மு.க., காங்., எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் பதில் தரப்படவில்லை.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பணிகள் சிறப்பாக நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளது. ஆனால் புதுச்சேரியில் கடந்த 9 ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் எதுவும் முழுமையடையாத நிலை உள்ளது. இத்திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்தாக குற்றச்சாட்டு உள்ளது.
அதேபோல், 100 நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 10 நாட்கள் கூட வேலை நடைபெறுவதில்லை. வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் கொடுக்கப்படும் கடனுதவிகள் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே செல்கிறது. ஆனால் ஐந்து துறைகள் ஆய்வு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, திட்டங்களை செயல்படுத்திய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றால் தான், அது குறித்து கேள்வி எழுப்பி பதில் பெற முடியும். தலைமைச் செயலாளர் பங்கேற்கவில்லை.
அதைவிடுத்து சம்பந்தமில்லாத அதிகாரிகளை கொண்டு கூட்டம் நடத்துவது கண் துடைப்பாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. துறை சம்பந்தமாக பதில் அளிக்கும் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்காததை கண்டித்து தி.மு.க., எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம்' என்றார்.
அதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து 1 மணி வரை கூட்டம் நடந்தது.