/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நம்ப வைத்து ஏமாற்றுவதே தி.மு.க.,வின் வேலை: விஜய் ஆவேசம்
/
நம்ப வைத்து ஏமாற்றுவதே தி.மு.க.,வின் வேலை: விஜய் ஆவேசம்
நம்ப வைத்து ஏமாற்றுவதே தி.மு.க.,வின் வேலை: விஜய் ஆவேசம்
நம்ப வைத்து ஏமாற்றுவதே தி.மு.க.,வின் வேலை: விஜய் ஆவேசம்
UPDATED : டிச 10, 2025 07:20 AM
ADDED : டிச 10, 2025 06:49 AM

புதுச்சேரி: ''புதுச்சேரி அரசைப் பார்த்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும்,'' என, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசினார்.
புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நேற்று நடந்த த.வெ.க., பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
எம்.ஜி.ஆர்., தலைமையிலான அ.தி.மு.க., தமிழகத்தில் ஆட்சியமைக்கும் முன்பே, 1974ல் புதுச்சேரியில் ஆட்சி அமைந்தது. எம்.ஜி.ஆரை மிஸ் பண்ணிடாதீங்க என தமிழகத்துக்கு 'அலெர்ட்' செய்தது புதுச்சேரி.
இப்போது, அதே புதுச்சேரி மக்கள் தான் என்னையும் தாங்கிப் பிடிக்கின்றனர். அதனால், தமிழகத்துக்கும் புதுச்சேரிக்கும் சேர்த்தே என் உழைப்பும், குரலும் இருக்கும்.
புதுச்சேரி அரசு, தமிழகத்தில் உள்ள தி.மு.க., அரசு போல் இல்லை. வேறொரு கட்சியின் நிகழ்ச்சி என்றாலும், பாரபட்சம் இல்லாமல் பாதுகாப்பு அளிக்கிறது.
அதற்காக புதுச்சேரி அரசுக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் என் மனப்பூர்வ நன்றி. புதுச்சேரி அரசைப் பார்த்தாவது, தமிழக அரசு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இதைப் பார்த்தாவது தமிழக தி.மு.க., அரசு கற்றுக் கொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசுடன் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடத்துகிறது. கூட்டணி ஆட்சி நடத்திக் கொண்டிருந்தாலும், மத்திய அரசு புதுச்சேரியின் வளர்ச்சியில் எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை.
மாநில அந்தஸ்து கோரிக்கை குறித்து கண்டுகொள்ளவே இல்லை. அதே போல மாநில வளர்ச்சிக்கு ஒதுபோதும் துணை நிற்கவில்லை. நிதி விஷயத்திலும் பல முரண்பாடுகள் உள்ளன.
புதுச்சேரி, காரைக்காலில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதை திறக்க, மத்திய அரசு, ஒரு துரும்பைக்கூட கிள்ளி போடவில்லை. புதுச்சேரியில், தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் முயற்சியை மத்திய அரசு எடுக்கவே இல்லை.
புதுச்சேரியில் பதவியில் இருந்த ஒரு அமைச்சரை, ஊழல் குற்றச்சாட்டுச் சொல்லி பதவியில் இருந்து நீக்கினர்.
ஆனால், அவருக்கு பதிலாக புதிதாக நியமிக்கப்பட்டவருக்கு துறை ஒதுக்கவில்லை. அவருக்கு, 200 நாட்களை கடந்த பின்பும், துறை ஒதுக்காதது வேதனை.
காரணம், நியமிக்கப்பட்டவர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர். இது சிறுபான்மையினத்தவரை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. இதை நான் கூறவில்லை; புதுச்சேரி மக்கள் கூறுகின்றனர்.
புதுச்சேரி சுற்றுலா நகரம். ஆனால், இங்கு போதிய பார்க்கிங் வசதி இல்லை; கழிப்பறை வசதி இல்லை. புதுச்சேரியில் இருந்து கடலுாருக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது.
ஆனால், அதை நிறைவேற்ற யாரும் முயற்சி எடுக்கவில்லை. தமிழகத்தைப் போல புதுச்சேரி மக்களுக்கும் ஒன்றே ஒன்றைத்தான் கூற வேண்டும். தி.மு.க.,வையோ தி.மு.க., அரசையோ ஒரு போதும் நம்பாதீர்கள். நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் அவர்களின் வேலை.
புதுச்சேரி மாநிலத்தில் 20 லட்சம் பேர் வாழுகின்றனர். ஆனால், புதுச்சேரி, மத்திய அரசின் நிதிக்குழுவில் இடம் பெறவில்லை. இதனால் மாநில நிதிப் பகிர்வு, யூனியன் நிதிப் பகிர்வு இல்லை. புதுச்சேரிக்கு, இன்று வரை தோராயமாகத்தான் நிதி ஒதுக்கீடு உள்ளது.
விடுவிக்கப்படும் குறைந்தபட்ச நிதியும், அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதிய திட்டங்களுக்கே செல்கிறது.
எஞ்சிய தேவைக்கு வெளிச் சந்தையிலும், கடன் பத்திரங்கள் வாயிலாகவும் கடன் வாங்க வேண்டிய சூழல் புதுச்சேரி அரசுக்கு உள்ளது.
இந்த நிலைமை மாற, மாநில அந்தஸ்து தான் ஒரே வழி. புதுச்சேரிக்கு தற்சார்பு பொருளாதார திட்டங்கள் வகுக்க வேண்டும்.
மீன்பிடிக்க செல்லும் காரைக்கால் மீனவர்களை அடிக்கடி கைது செய்யும் இலங்கை கடற்படை, படகுகளையும் பறிமுதல் செய்கிறது. நீண்ட போராட்டங்களுக்கு பின், மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், படகுகள் விடுவிக்கப்படுவதில்லை.
புதுச்சேரி மக்களுக்கு த.வெ.க., எப்போதும் துணை நிற்கும். புதுச்சேரியில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தல் களத்தில் த.வெ.க., வெற்றி பெறும்.இவ்வாறு விஜய் பேசினார்.
துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு
புதுச்சேரி, உப்பளம் துறைமுக மைதானத்தில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, 'கியூ ஆர்' குறியீட்டுடன் கூடிய 'பாஸ்' உடன் வந்த தொண்டர்களை, 'மெட்டல் டிடெக்டர்' வாயிலாக போலீசார் பரிசோதித்து அனுமதித்தனர்.
அவரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட், 48; சி.ஆர்.பி.எப்.,ல் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். சிவகங்கை கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலர் டாக்டர் பிரபுவிற்கு, அரசின் அனுமதி பெற்ற தனி பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருவதும், பொதுக்கூட்ட திடலில் நடந்த மருத்துவ முகாமில் பங்கேற்ற த.வெ.க., செயலர் டாக்டர் பிரபுவின் பாதுகாப்புக்காக டேவிட் வந்ததும் தெரிய வந்தது.

