ADDED : ஜூன் 27, 2026 12:37 AM

புதுச்சேரி: எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதையடுத்து, நீதி கேட்டு டாக்டர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் அருள்விசாகன் நேற்று முன்தினம் வீட்டில் அதிக அளவில் துாக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அவர் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் டாக்டர்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள், அரசு பொது மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, டாக்டர் அருள்விசாகனின் நிலைக்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர் மீது உள்ள போலி குற்றச்சாட்டுகள் அனைத்தும் சட்டப்படி உரிய அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு உண்மை நிலை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்; புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இந்த விவகாரத்தில் முழுமையான எவ்வித பாரபட்சம் இல்லாத விசாரணையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்; என கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, வரும் 28ம் தேதி முதல் நீதி கேட்டு வேலை நிறுத்தப் போரட்டத்தை டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
