காங்., பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம் பா.ஜ., மாநில தலைவர் வேண்டுகோள்
காங்., பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம் பா.ஜ., மாநில தலைவர் வேண்டுகோள்
ADDED : செப் 29, 2026 04:31 PM
புதுச்சேரி: தேர்தல் ஆணையர் குறித்த காங்., கட்சியின் பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
காங்., தேர்தல் ஆணையத்தின் மீதும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உட்பட ஆணைய உறுப்பினர்கள் மீது முரண்பட்ட கருத்துகள் இருப்பது போல் ஒரு மாயை உருவாக்குகிறது. எஸ்.ஐ.ஆர்., முறைகேடு இல்லாமல், நேர்மையாக நடத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் காங்., கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததிற்கு எஸ்.ஐ.ஆர்., காரணம் என, அம்மாநில முன்னாள் அமைச்சர் ரமேஷ் சென்னிதாலாவும், தற்போதைய முதல்வர் சதீஷனும் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்கள் பெயர்கள் , சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பெயர்கள்தான், நீக்கப்பட்டுள்ளன. தொடந்து தோல்விகளை சந்திந்து வரும் ராகுல், வெளிநாடுகளில், இந்தியாவை பற்றி குறை கூறுகிறார். பிரதமர் மோடிக்கு சர்வதேச அளவில் 33 நாடுகள் உயரிய விருதுகளை வழங்கியுள்ளது. அவரது ஆட்சி காலத்தில், 25 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்து மீண்டு வந்துள்ளனர். டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் அரசின் நலத்திட்ட தொகைகள் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன. முறைகேடான வாக்காளர்கள் நீக்கப்பட்டதால்தான் தமிழகத்தில் விஜய் வெற்றி பெற முடிந்தது. எனவே காங்., கட்சியின் பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.
