/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு 'டி.வி.ஆர்., தினமலர்' சுழற்கோப்பை
/
சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு 'டி.வி.ஆர்., தினமலர்' சுழற்கோப்பை
சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு 'டி.வி.ஆர்., தினமலர்' சுழற்கோப்பை
சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு 'டி.வி.ஆர்., தினமலர்' சுழற்கோப்பை
ADDED : ஜன 11, 2026 05:31 AM

புதுச்சேரி: மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு டி.வி.ஆர்., தினமலர் சுழற்கோப்பை பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், 2025-26ம் கல்வியாண்டுக்கான மாநில அறிவியல் கண்காட்சி, முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் துவங்கியது. அதில், மண்டல அளவிலான கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலை அகிய நான்கு பிரிவுகளிலிருந்து புதுச்சேரி 40, காரைக்கால் 26, மாஹே 16, ஏனாம் 16 என 98 அறிவியல் படைப்புகள் மற்றும் 29 ஆசிரியர் அறிவியல் படைப்புகள் இடம் பெற்றன. 15 பேர் கொண்ட மதிப்பீட்டு குழுவினர், ஒவ்வொரு படைப்புகளையும் பார்வையிட்டு மதிப்பீடு செய்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
அதில், நடுநிலை மற்றும் உயர்நிலை பிரிவுகளின் கீழ் தனிநபர் பிரிவில் 15 படைப்புகளும், குழு பிரிவில் 10 அறிவியல் படைப்புகளும், ஆசிரியர் பிரிவில் 10 அறிவியல் படைப்புகளும், ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டன.
கண்காட்சியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. கல்வித்துறை இயக்குநர் சிவக்குமார் வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்.பி., முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினரான கவர்னர் கைலாஷ்நாதன், கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த அறிவியல் படைப்பகளுக்கு பரிசு வழங்கினார். அதில், தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் ஆசிரியர்கள் பிரிவில் முதல் மூன்று பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாகி ஆகிய பிராந்தியங்களில் இருந்து சிறப்பிடம் பெற்றவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சுழற்கோப்பையும், மாநில அளவில் முதல் பரிசு வென்ற மாணவர்களுக்கு டி.வி.ஆர்., தினமலர் சுழற்கோப்பை பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி நன்றி கூறினார்.
கண்காட்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் மோகன் பிரசாத், சாய் வர்கீஸ், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கலியமூர்த்தி, கருணாகரன் ஆகியோர் தலைமையில் துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

