டிஸ்லெக்சியா, ஆட்டிசம் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை நாளை நடக்கிறது
டிஸ்லெக்சியா, ஆட்டிசம் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை நாளை நடக்கிறது
ADDED : அக் 30, 2026 12:48 AM
புதுச்சேரி: டிஸ்லெக்சியா, ஆட்டிசம் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை நாளை 31ம் தேதி காலை 9:00 முதல் மாலை 5:30 மணி வரை, புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் நடக்கிறது.
புதுச்சேரி டிஸ்லெக்சியா அசோசியேஷன், புதுச்சேரி ஆட்டிசம் வெல்பேர் சொசைட்டி மற்றும் பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி ஆகியன சார்பில், நடக்கும் நிகழ்ச்சியில், காலை அமர்வில் டிஸ்லெக்சியா குறித்தும், பிற்பகல் அமர்வில் ஆட்டிசம் குறித்தும் நிபுணர்கள் விளக்கமளித்து, கற்பித்தல் மற்றும் நடைமுறை அணுகுமுறைகளை பகிர்ந்து கொள்கின்றனர்.
விழாவில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், சிவகொழுந்து, நாராயணசாமி எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
சமூக நலத்துறை இயக்குநர் ராகிணி, சமக்ர சிக் ஷ மாநிலத் திட்ட இயக்குநர் எழில் கல்பனா, மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை இணை இயக்குநர் புவனேஸ்வரி, பத்மஸ்ரீ டாக்டர் நளினி மற்றும் ஜிப்மர் முன்னாள் மூத்த குழந்தை நல மருத்துவர் எமரிட்டஸ், பேராசிரியர் மகாதேவன், டாக்டர் சிம்மி மகாஜன், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.
டிஸ்லெக்சியா அமர்வில் கல்வி உளவியலாளர் புவனா வாசுதேவன், டாக்டர் தானா பிரபாகரன் ஆகியோரும், ஆட்டிசம் அமர்வில் தொழில்சார் சிகிச்சைப் பேராசிரியர் ஷஷிதர் ராவ் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணைப் பேராசிரியர் ரத்தீஷ் கலந்துரையாடி பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர்.
ஏற்பாடுகள் குறித்து டாக்டர் புவனா வாசுதேவன் கூறுகையில், ‘ஒவ்வொரு குழந்தையின் கற்றல் வேறுபாட்டையும் புரிந்துகொண்டு, அவரவர் திறனுக்கேற்ற கற்பித்தல் முறைகளை பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிப்பதே இப்பட்டறையின் முக்கிய நோக்கமாகும்’ என்றார்.
கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள், உளவியலாளர்கள், மனநல மருத்துவர்கள் மற்றும் சிறப்பு கல்வியாளர்கள் இப்பட்டறையில் பங்கேற்கின்றனர்.
