UPDATED : அக் 29, 2026 10:48 PM
ADDED : அக் 29, 2026 10:45 PM
9 பேர் மீது வழக்கு பதிவு: காரைக்கால் நிரவி ஓ.என்.ஜி.சி. பொதுப்பள்ளியின் மாணவர்களுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்களின் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியை பெர்னார்ட் டோரத்தி ஜோசியன், 47, என்பவர் அளித்த புகாரை அடுத்து, காரைக்கால் நடுவர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், ஆசிரியைக்கு மிரட்டல் விடுத்ததாக காரைக்காலை சேர்ந்த ஜீவமணி, வசந்த், பிரான்சிஸ் சேவியர், சுமித்ரா, செந்தமிழ்ச்செல்வன், சோபனா, எட்வின் சாமுவேல், கார்த்திகேயன் மற்றும் திருமுருகன் ஆகிய 9 பேர் மீது நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குட்கா’ பறிமுதல்: காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். காமராஜர் சாலையில் உள்ள பார் அருகே பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுக்குறித்து கடையின் உரிமையாளர் காரைக்கால், ராஜாதி நகரைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், 54 என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, ரூ.8,982 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வாலிபர் கைது: காரைக்கால், திருநள்ளாறு சாலையில் உள்ள சந்தை திடலில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பதாக நேற்று முன்தினம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் ஆண்டோ மற்றும் போலீசார் இளைஞர்களிடம் விற்பதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த திருநள்ளாறு சாலையை சேர்ந்த அஜித்குமார், 29, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 54 கிராம கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாலிபர் மீது வழக்கு: அம்பகரத்துார் பகுதியில் நேற்று முன்தினம் குடிபோதையில் பொது இடத்தில் தகராறில் ஈடுப்பட்ட திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குருங்குளத்தைச் சேர்ந்த வின்சென்ட்ராஜ், 32, என்பவர் மீது அம்பகரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் மீது வழக்கு: திருநள்ளாறு, செல்லுார் வி.ஐ.பி. நகரில் பொது இடத்தில் மது அருந்தி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த சக்தி, 25, என்பவர் மீது திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் கைது: நல்லாத்துார் சாலையில் உள்ள பஸ் நிலையம் அருகில் நேற்று முன்தினம் மது போதையில் ஆபாசமாக பேசிய தரங்கம்பாடி வட்டம், பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா, 34, என்பவர் மீது நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
