ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு கோரி இ– பஸ் நடத்துனர்கள் போராட்டம்
ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு கோரி இ– பஸ் நடத்துனர்கள் போராட்டம்
ADDED : செப் 21, 2026 06:51 PM
புதுச்சேரி: பி.ஆர்.டி.சி., இ–பஸ் நடத்துனர்கள் ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு கோரி நேற்று காலை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம்(பி.ஆர்.டி.சி) சார்பில் தனியார் பங்களிப்புடன் ரூ. 23 கோடி மதிப்பீட்டில் 45 இ– பஸ்கள் இயங்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் 75க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இ– பஸ்களில் பணியாற்றும் நடத்துனர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை பஸ் நிலையத்தில் ஒன்று கூடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், சொசைட்டி மூலம் ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 553 ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும், உரிய நேரத்தில் வழங்கப்படாமல், 10-ம் தேதிக்கு பதிலாக 15-ம் தேதிக்கு பிறகே வழங்கப்படுகிறது.
மேலும், அடிப்படை ஊதியம், பி.எப். பிடித்தம், பணி பாதுகாப்பு மற்றும் நிரந்தர வேலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை. குறிப்பாக, இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் பெண் நடத்துனர்களுக்கு அடையாள அட்டை வசதிகள் கூட இல்லை என கூறி அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
இ– பஸ் நடத்துனர்களின் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தால், நேற்று இ–பஸ் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு, அனைத்து பஸ்களும் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தன.
