/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் விடிய விடிய மழை; 12.74 செ.மீ., பதிவு
/
புதுச்சேரியில் விடிய விடிய மழை; 12.74 செ.மீ., பதிவு
புதுச்சேரியில் விடிய விடிய மழை; 12.74 செ.மீ., பதிவு
புதுச்சேரியில் விடிய விடிய மழை; 12.74 செ.மீ., பதிவு
ADDED : நவ 14, 2024 07:32 AM

புதுச்சேரி; புதுச்சேரியில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய பெய்த மிதமான மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது. மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். 33 மணி நேரத்தில் 12.74 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தென் மேற்கு வங்க கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவானது. இதன் காரணமாக புதுச்சேரியில் நேற்று முன்தினம் மாலை முதல் இடைவிடாமல் மிதமான மழை பெய்தது. நள்ளிரவு முதல் நேற்று விடியற்காலைவரை கனமழை பெய்தது. இந்த மழை நகரப்பகுதி மட்டுமின்றி, திருக்கனுார், வில்லியனுார், மடுகரை, பாகூர் உள்ளிட்ட பகுதியிலும் பெய்தது. இதனால், பாதுகாப்பு கருதி சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
தொடர் மழை காரணமாக புதுச்சேரி ரெயின்போ நகர், சூரியகாந்தி நகர், எழில் நகரில் மழைநீர் தேங்கியது. வெள்ளவாரி வாய்க்காலில் இருந்து வரும் மழைநீர் எளிதாக வழிந்தோட வழியில்லாததால் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதுபோல் பூமியான்பேட்டை, பொய்யாக்குளம் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. வீடுகளில் தேங்கிய மழைநீரை மோட்டார் பம்ப் மூலம் பொதுமக்களே வெளியேற்றினர்.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணிவரை 12.18 செ.மீ., மழை பதிவானது. காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை 5.6 மி.மீ., பதிவானது. தொடர்ச்சியாக பெய்த மிதமான மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. நேற்று மாலை வரை கடந்த 33 மணி நேரத்தில் 12.74 செ.மீ., மழை பெய்தாலும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
மாணவர்கள் ஏமாற்றம்:
நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து கொண்டு இருந்ததால் பள்ளி விடுமுறை அறிவிப்பு வரும் என மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால் காலை 7:30 மணிக்கு, பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. மாணவர்கள் ஏமாற்றத்துடன், மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர்.