/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் எலெக்ட்ரிக் பஸ் சார்ஜ் ஸ்டேஷன்... அமைகிறது; ரூ.1.5 கோடி திட்டத்துடன் மின் துறை தீவிரம்
/
புதுச்சேரியில் எலெக்ட்ரிக் பஸ் சார்ஜ் ஸ்டேஷன்... அமைகிறது; ரூ.1.5 கோடி திட்டத்துடன் மின் துறை தீவிரம்
புதுச்சேரியில் எலெக்ட்ரிக் பஸ் சார்ஜ் ஸ்டேஷன்... அமைகிறது; ரூ.1.5 கோடி திட்டத்துடன் மின் துறை தீவிரம்
புதுச்சேரியில் எலெக்ட்ரிக் பஸ் சார்ஜ் ஸ்டேஷன்... அமைகிறது; ரூ.1.5 கோடி திட்டத்துடன் மின் துறை தீவிரம்
ADDED : நவ 04, 2024 05:43 AM

புதுச்சேரி : புதுச்சேரி நகர பகுதியில் எலெக்ட்ரிக் பஸ்களுக்கான 'சார்ஜ் ஸ்டேஷன்' விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த 1.5 கோடி ரூபாயில் மின் துறை களம் இறங்கியுள்ளது.
நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தால் நிறையப் பேர் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.
வரும் 2030 ஆண்டுக்குள் நாட்டில் மின்சார வாகனப்பயன்பாடு அதிகரிக்கும். இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் மின்சார வாகனங்களுக்கான ஊக்கத் தொகை திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்திலும் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்களுக்கு தேவையான சார்ஜ் ஸ்டேஷன் உள்கட்டமைப்பினை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
சார்ஜ் ஸ்டேஷன்களை அமைப்பதற்கான நோடல் துறையாக புதுச்சேரி மின் துறை தேர்வு செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், 1.5 கோடி ரூபாய் திட்டத்துடன் களம் இறங்கியுள்ளது. தாவரவியல் பூங்கா எதிரே உள்ள இடத்தில் இந்த சார்ஜ் ஸ்டேஷன் அமைய உள்ளது.
இந்த சார்ஜ் ஸ்டேஷனுக்கு வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் இணைப்பு புதைவடமாக கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான ராட்சத மின்கேபிள்கள் லாரிகளில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளன.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'புதுச்சேரி நகர பகுதியில் பொதுபோக்குவரத்தினை அதிகரிக்கும் வகையில் 25 எலெக்டரிக் பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது. இதற்கான கொள்முதல் ஒப்பந்தம் ஓரிரு தினங்களில் வழங்கப்பட்டு விடும். அதன் பிறகு ஒரு எலெக்டரிக் பஸ் மட்டும் சோதனை ஓட்டமாக இயக்கப்படும்.
இரண்டாம் கட்டமாக 15 எலெக்டரிக் பஸ்களும், மூன்றாம் கட்டமாக 10 எலெக்டரிக் பஸ்களும் இயக்கப்படும்.
இந்த மின்சார பஸ்களை இயக்க சார்ஜ் ஸ்டேஷன் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை அந்த நிறுவனமே விரைவில் ஏற்படுத்தி கொண்டு இயக்கும். மின்சார பஸ்கள் நகர பகுதியில் புதிய வழித்தடங்களில் இயக்கப்படும். இதற்கான டிக்கெட் கட்டணம், அரசின் மானியம் இரண்டும் ஒரே கணக்கில் வரைவு வைக்கப்படும்.
அதன் பிறகு ஒரு கிலோ மீட்டருக்கு 60 ரூபாய் வீதம் கணக்கிட்டு எலெக்ட்ரிக் பஸ்களை இயக்கிய நிறுவனத்திற்கு அரசு செலுத்தும். அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் எலெக்ட்ரிக் பஸ்கள் அனைத்தும் முழுமையாக இயக்கப்பட்டு விடும்.
இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் மொத்தம் 9 மீட்டர் நீளம் கொண்டது. 36 பேர் வரை அமர்ந்து பயணம் செய்யலாம். இந்த பஸ்கள் அனைத்து ஜி.பி.எஸ்., கண்காணிப்பில் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. பஸ்களை இயக்கவிட்டால் அபராதம் விதிக்கப்படவும் உள்ளது' என்றனர்.