ADDED : ஜூலை 04, 2025 02:20 AM

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி மின்துறை தலைவர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.
கூட்டு நடவடிக்கை குழு தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் தணிகாசலம் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் செந்தில்குமார், தணிகைவேலன், ரவிச்சந்திரன், முருகன், கண்ணன், தொழிற்சங்க பொறியாளர்கள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில், 5வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஒரு நபர் குழு பரிந்துரையின் பேரில், மின்துறையில் உள்ள 13 பதவிகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட சம்பளத்திற்கான ஒப்புதலை, கவர்னரிடம் உடனடியாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டன.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மின்துறை தலைவர் ராஜேஷ் சன்யால் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், தங்களது கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.