ADDED : பிப் 21, 2024 06:58 AM

புதுச்சேரி : பதவி உயர்வு வழங்க கோரி மின்துறை ஐ.டி.ஐ., நலச்சங்கத்தினர், மின்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மின்துறையில் பணியாற்றும் ஒயர்மேன்களுக்கு, உதவி லைன் இன்ஸ்பெக்டர் (ஏ.எல்.ஐ.) பதவி உயர்வு வழங்கக் கோரி ஐ.டி.ஐ. நலச்சங்கத்தினர் கடந்த டிசம்பர் மாதம் மின்துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு முன்னதாக பதவி உயர்வு வழங்க மின்துறை ஒப்புக் கொண்டது.
இதுவரை பதவி உயர்வு வழங்காததால் பலர் ஓய்வு பெறும் நாளை நெருங்கி கொண்டிருக்கின்றனர்.
எனவே, உடனடியாக பதவி உயர்வு வழங்க கோரி மின்துறை ஐ.டி.ஐ., நலசங்கத்தினர் நேற்று காலை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் ரவி தலைமை தாங்கினர்.கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், விரைவில் பதவி உயர்வு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.
அதை ஏற்று மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

