ADDED : ஜூன் 08, 2026 04:14 AM
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அருகே உயரழுத்த மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த மின் ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தவளக்குப்பம் அடுத்த கொருக்கன்மேடு காசந்திட்டு பகுதியை சேர்ந்தவர் முகிலன், 31; தவளக்குப்பம் மின் அலுவலக லைன் மேன். ஆண்டியார்பாளையம் சாலையில் உள்ள மின் கம்பத்தில் ஏறி சேதமடைந்த மின் கம்பியை நேற்று மதியம் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது மின் கம்பத்தின் மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் இருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து முகிலன் படு காயமடைந்தார்.
உடனடியாக அவரை பணியில் இருந்த மின்துறை இளநிலைப்பொறியாளர் திருமுருகன் மற்றும் ஊழியர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, முதலுதவி அளிக்கப்பட்டது.
பின், மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
