/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனையில் மாலை நேர சிகிச்சை பிரிவு
/
அரசு மருத்துவமனையில் மாலை நேர சிகிச்சை பிரிவு
ADDED : நவ 30, 2024 06:43 AM

புதுச்சேரி : இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் மாலை நேர வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் காலை 7:30 மணி முதல் 10:30 மணி வரை வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு வாரத்தில் ஐந்து நாட்கள் இயங்கி வந்தது. தொடர்ந்து மதியம் 12:30 மணி வரை டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெறலாம். சனிக்கிழமை மட்டும் 7:30 மணிக்கு துவங்கி 9:00 மணி வரை மட்டும் இயங்கி வருகிறது. அரசு விடுமுறை நாட்களில் கிடையாது.
இந்நிலையில் கூலி வேலைக்கு செல்லும் ஏழை மக்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் காலை நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தால், அவர்களின் அன்றாட வருவாய் பாதிக்கும் என்பதால், அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாலை நேர வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவை துவங்க கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டார்.
அடுத்த மாதம் முதல் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள 22ம் எண் ரண சிகிச்சை பிரிவில் முதற்கட்டமாக மாலை 5:00 மணிக்கு துவங்கி இரவு 7:30 மணி வரை மாலை நேர வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்பட உள்ளது. இதில், அனைத்து சிகிச்சைகளுக்கும் டாக்டர்கள் இருப்பர். வழக்கம் போல் அவசர சிகிச்சை பிரிவும் இயங்கும் என, மருத்துவ அலுவலர்கள் கூறினர்.