முன்னாள் ராணுவ வீரர்கள் மானியத் தொகை பெற 24ம் தேதி முதல் ஆவணங்களை சமர்பிக்கலாம்
முன்னாள் ராணுவ வீரர்கள் மானியத் தொகை பெற 24ம் தேதி முதல் ஆவணங்களை சமர்பிக்கலாம்
ADDED : செப் 21, 2026 08:51 PM
புதுச்சேரி: ராணுவ வீரர்களுக்கான இலவச விழாக்கால மானியத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி முப்படை நலத் துறை இயக்குநர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி முப்படை நலத்துறை மூலமாக முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக 60 வயது நிறைவுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்களுக்கு 2025–26 ஆண்டிற்கான விழாக்கால மானியத் தொகை ரூ. 5,000 வழங்க ஒப்புதல் பெறப்பட்டு பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
இதற்காக துறை வழங்கிய அசல் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு விபரத்துடன் இவ்வலுவலகத்திற்கு வரும் 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் நேரில் வர வேண்டும். கையொப்பமிட்டு அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் பிரதியையும் சமர்பிக்கவேண்டும். காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் மண்டலங்களின் பயனாளிகள் மண்டல நிர்வாக அலுவலகத்திற்கு சென்று இந்த விபரங்களை சமர்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு முப்படை நலத்துறையின் 0413-2253107, 2250575 தொடர்புகொள்ளவும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
