மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் முறை இன்று நடக்கிறது
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் முறை இன்று நடக்கிறது
ADDED : செப் 21, 2026 08:41 PM
: புதுச்சேரி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் முறை இன்று வேட்பாளர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் நடக்கிறது. இது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தலில் வரும் 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட பரிசோதனை சரிபார்க்கப்பட்ட இயந்திரங்களில் இருந்து தேர்தலில் பயன்படுத்துவற்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம். மற்றும் வி.வி.பாட்) ஓட்டுச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யவும், இரண்டாவது முறை தற்செயல் கலப்பு முறை, தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட இ.வி.எம். மேலாண்மை மென்பொருள் 2.0 மூலம் தேர்தல் நடத்தும் அதிகாரியால், வேட்பாளர்கள் மற்றும் பொது பார்வையாளர் முன்னிலையில் இன்று ( 22ம் தேதி) காலை 11:00 மணியளவில் புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் நடக்கிறது.
இரண்டாம் தற்செயல் கலப்பு நிறைவடைந்த பிறகு ஓட்டுச்சாவடி வாரியாக ஒதுக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இ.வி.எம். மற்றும் வி.வி.பாட் ஆகியவற்றின் பட்டியல் மற்றும் இருப்பு இயந்திரங்களின் பட்டியல் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் சின்னம் பொறிக்கப்பட்ட ஓட்டுச்சீட்டு பொருத்தப்பட்டு தேர்தலுக்கு தயார் படுத்தும் பணி வரும் 25ம் தேதி, லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் நடைபெற உள்ளது. பின்னர் கல்லுாரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
