/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் ஏரி நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்
/
பாகூர் ஏரி நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்
ADDED : டிச 14, 2024 03:36 AM

பாகூர்: பாகூர் ஏரியின் நீர் மட்டம் அதிக பட்ச அளவை எட்டிய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் கலிங்கல் வழியாக வெறியேற்றப்பட்டு வருகிறது.
புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியாக பாகூர் ஏரி உள்ளது. இதன் ஆழம், 3 மீட்டராகும். இந்த ஏரியில் அதிகபட்சமாக 193 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். கடந்த வாரம் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கன மழையால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பாகூர் ஏரியின் நீர்வரத்து ஆதாரமான சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக சீறிப்பாய்ந்து வந்த தண்ணீரில் பாகூர் ஏரி அதிகபட்ச கொள்ளவான 3.6 மீட்டரை எட்டியது.
தொடர்ந்து, பங்காரு வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பாகூர் ஏரியின் கலிங்கல் வழியாக தண்ணீர் வெளியேறி, ஏரியையொட்டி உள்ள அரங்கனுார், கீழ்குமாரமங்கலம், மேலழிஞ்சிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களின் வழியாக புகுந்து ஓடி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சாத்தனுார் அணையில் இருந்து நேற்று முன்தினம் 13 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்ட நிலையில், தென்பெண்ணையாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
சொர்ணாவூர் அணைகட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி, நீர் வரத்து முழுவதும் உபரி நீராக அரங்கனுாரில் உள்ள கலிங்கல் வழியாக வெளியேறி வருகிறது.
தொடர் மழையின் காரணமாக பாகூர், கிருமாம்பாக்கம், பரிக்கல்பட்டு உள்ளிட்ட ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளதால், பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

