/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகிளா காங்., பிரிவில் வெடித்த கோஷ்டி மோதல்
/
மகிளா காங்., பிரிவில் வெடித்த கோஷ்டி மோதல்
ADDED : ஜன 21, 2025 06:30 AM
பெண் நிர்வாகி அதிரடி சஸ்பெண்ட்
புதுச்சேரி: மகிளா காங்., பிரிவில் வெடித்த கோஷ்டி மோததால், பெண் நிர்வாகி சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அமலுக்கு வரவில்லை. இந்த இடஒதுக்கீடு வரும் சட்டசபை தேர்தலில் யூனியன் பிரதேசங்களில் முதலில் அமல்படுத்தலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தினால், சட்டசபையில் 11 பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெறுவர். இதனால் ஒவ்வொரு பிரதான கட்சியிலும் பெண் நிர்வாகிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
காங்., கட்சியின் மகிளா காங்., பிரிவில் ஏராளமான பெண்கள் இணைந்து வருகின்றனர். புதிதாக இணைந்த நிர்வாகிகளுக்குள் கோஷ்டி பூசல் உருவாகி தனி தனி குழுக்களாக செயல்பட துவங்கி விட்டனர். இது கட்சி தலைமைக்கு தலைவலியை உருவாக்கி வருகிறது.
இந்நிலையில், கட்சிக்குள் பங்கம் விளைவிக்கும் விதத்தில் நடந்து கொண்ட மகிளா காங்., நிர்வாகி நிஷாவை, மகிளா காங்., புதுச்சேரி தலைவர் பஞ்சகாந்தி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சகாந்தி, மாநில காங்., கட்சி தலைவர் வைத்திலிங்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில்; மகிளா காங்., நிர்வாகி நிஷா, முப்பெரும் விழா என்ற பெயரில் எனக்கு தகவல் தெரிவிக்காமலும், அனுமதி பெறாமல் காங்., கட்சி அலுவலகத்தில் நடத்தியுள்ளார்.
சில மகளிரை தன் வசம் வைத்து கொண்டு, எந்தவித நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது என மிரட்டுகிறார். பொதுகுழுவில் என்னை அவமதித்து பேசி வருகிறார். கட்சியின் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் விதத்தில் தனி நபராக செயல்பட்டு கட்சி நிர்வாகிகளுக்குள் ஒற்றுமையின்மை ஏற்படுத்துகிறார். அதனால் நிஷாவை தற்காலிகமாக நீக்க நடவடிக்கை எடுக்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

