/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரகண்டநல்லுார் அருகே விவசாயி அடித்து கொலை
/
அரகண்டநல்லுார் அருகே விவசாயி அடித்து கொலை
ADDED : ஜன 01, 2025 05:11 AM

திருக்கோவிலுார்   அரகண்டநல்லுார் அருகே கரும்பு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், நாயனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் மணிகண்டன், 28; விவசாயி.
நேற்று முன்தினம் இரவு மெயின் ரோடு பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
இரவு 8:30 மணி அளவில், கரும்பு தோட்டம் அருகே வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் வினோத்,19; நின்றிருந்தார். அவரிடம் 'இங்கு உனக்கு என்ன வேலை' என மணிகண்டன் கேட்டதால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த வினோத், தனது அண்ணன் பழனிவேல்,27;க்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். பழனிவேல், பார்த்திபன், 26; கோபி,20; பாக்கியராஜ் 36; ஆகியோருடன் நாயனுார் கிராமத்திற்கு சென்றார்.
அங்கு இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வினோத் உள்ளிட்ட ஐந்து பேரும் மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். இதில் மணிகண்டன் மயங்கி விழுந்தார்.
இதையறிந்த கிராம மக்கள் தாக்கிய கும்பலை பிடித்து வைத்துக் கொண்டு அரகண்டநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீத், சப் இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
மயங்கி விழுந்த மணிகண்டனை உறவினர்கள் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள்,  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மணிகண்டனின் மனைவி வனிதா, 28; கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார், தாக்கிய கும்பல் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்துக்கு காரணமான வீரபாண்டியைச் சேர்ந்த மேலும் சிலரை கைது செய்ய வலியுறுத்தி நாயனுார் பொதுமக்கள் திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில், தேவனுார் கூட்ரோட்டில் இரவு 1.00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. கிராமத்தில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

