/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெல் பயிரில் பூச்சி தாக்குதல் விவசாயிகள் கவலை
/
நெல் பயிரில் பூச்சி தாக்குதல் விவசாயிகள் கவலை
ADDED : நவ 27, 2024 04:27 AM
பாகூர், : பாகூர் பகுதியில் நெல் பயிரில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
புதுச்சேரியின் நெற் களஞ்சியமான பாகூரில் நடப்பு சம்பா பருவத்தில், பொன்னி, பி.பி.டி., பொன்மணி உள்ளிட்ட நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தட்ப வெப்ப சூழல் அடிக்கடி மாறி வருவதால் நெல் பயிர்களில் அசும்பு பூச்சு தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.
சில இடங்களில், நடவு செய்யப்பட்ட நாற்றுகள் ஒரு மாதம் கழித்த பின்னரும் கூட, பச்சை பிடிக்காமலும், வேர் பிடித்து பயிர் கிளைத்து வளராமல் பின் தங்கி உள்ளது. அதேபோல், கதிர்கள் வெளிவரும் நிலையில் உள்ள பயிர்களில் குருத்துப் பூச்சி தாக்குதலால், குருத்துகள் ஒடிந்து விழுந்து காய்ந்து விடுகிறது.
மேலும், பூச்சு தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயன மருந்துகளை வாங்கி பயிர்களுக்கு அடித்தும் எந்த பயனும் இல்லாததால், அருகில் உள்ள கடலூர், விழுப்புரம் கிராம பகுதியில் உள்ள சில முன்னோடி விவசாயிகளிடம் ஆலோசனையை பெற்று மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். பூச்சு தாக்குதல் கவனிக்காமல் விட்டால், மகசூல் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
எனவே, வேளாண் அதிகாரிகள் பூச்சு தாக்குதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிட வேண்டும். மேலும், பாசிக் நிறுவனம் மூலம் மீண்டும் மானிய விலையில் உரம், பூச்சி கொல்லி மருந்துகளை வழங்கிட வேண்டும்.