/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பிராந்திய விவசாயிகள் தவிப்பு: நெல்லுக்கான உற்பத்தி மானியம் கிடைக்குமா?
/
புதுச்சேரி பிராந்திய விவசாயிகள் தவிப்பு: நெல்லுக்கான உற்பத்தி மானியம் கிடைக்குமா?
புதுச்சேரி பிராந்திய விவசாயிகள் தவிப்பு: நெல்லுக்கான உற்பத்தி மானியம் கிடைக்குமா?
புதுச்சேரி பிராந்திய விவசாயிகள் தவிப்பு: நெல்லுக்கான உற்பத்தி மானியம் கிடைக்குமா?
ADDED : மே 07, 2025 12:48 AM

புதுச்சேரி: வேளாண் அதிகாரிகளின் பாரபட்சமான செயல்பாட்டினால், புதுச்சேரி பிராந்திய விவசாயிகள்,அரசு அறிவித்துள்ள நெல் உற்பத்தி மானியத்தை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
மாநிலத்தின் பிரதான தொழிலான விவசாயத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள், விதை, உரம், வேப்பம் புண்ணாக்கு, உயிர் உரம், பூச்சி மரந்து, ஜிப்சம், ஜிங்சல்பேட் போன்றவைகளை கடந்த 2018 ம் ஆண்டு வரை பாசிக் நிறுவனம் மூலம் மானியத்தில் வழங்கப்பட்டது.
அதன்பிறகு இடுபொருட்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு, உற்பத்தி மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதில், பொது பிரிவினருக்கு ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம், அட்டவணை இனத்தவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 6 ஆயிரம் என ஆண்டிற்கு இரு போகத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த உற்பத்தி மானியம், நெல் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.
புதுச்சேரி பிராந்தியத்தில் கடந்த 2023--24 சம்பா பருவத்தில் 14,465 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், 8,532 ஏக்கருக்கு மட்டுமே உற்பத்தி மானியமாக 4 கோடியே 35 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. 5,933 ஏக்கர் நெல் சாகுபடிக்கு உற்பத்தி மானியம் வழங்கப்படவில்லை.
அதே ஆண்டில் காரைக்கால் மாவட்டத்தில், நெல் சாகுபடி செய்யப்பட்ட 11,068 ஏக்கரில், 10,159 ஏக்கருக்கு உற்பத்தி மானியமாக 5 கோடியே 20 லட்சத்து 35 ஆயிரம் வழங்கப்பட்டது. 909 ஏக்கருக்கு மட்டுமே உற்பத்தி மானியம் வழங்கப்படவில்லை.
இதேபோல் கடந்த 2024--25 சம்பா பருவத்தில், புதுச்சேரியில் 9,711 ஏக்கருக்கு ரூ 4 கோடியே 96 லட்சத்து 16 ஆயிரம் உற்பத்தி மானியம் வழங்கப்பட்டது. ஆனால், காரைக்காலில் 10,673 ஏக்கருக்கு உற்பத்தி மானியமாக 5 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரம் வழங்கப்பட்டது.
காரைக்காலை விட அதிக பரப்பளவில் புதுச்சேரியில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டாலும் உற்பத்தி மானியம் குறைந்த பரப்பளவிற்கே வழங்கப்படுகிறது.
இதற்கு காரணம், கடந்த 2023ம் ஆண்டு முதல் விவசாயிகள் தங்கள் நில சாகுபடி விவரங்களை வேளாண் அடுக்ககம் (அக்ரி ஸ்டாக்) மூலம் பதிவு செய்திருந்தால் மட்டுமே உற்பத்தி மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் அடுக்ககத்தில் நிலங்களை பதிவேற்றம் செய்ய, பட்டா, பத்திரம் மற்றும் வில்லங்க சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
காரைக்கால் பிராந்தியத்தில் பெரும்பாலான நிலங்கள் வேளாண் அடுக்ககத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் இப்பணியில பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. வருவாய் துறையில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பட்டா மாற்றுவதில் காலதாமதமாகிறது. கடந்த 2 ஆண்டுகளில் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பித்த நுாற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
இதே நிலை காரைக்காலில் இருந்தாலும், வருவாய் துறையினர் தரும் சான்றின் பேரில் அக்ரி ஸ்டாக்கில் வேளாண் அதிகாரிகள் பதிவு செய்கின்றனர்.
ஆனால், புதுச்சேரியில், பட்டா, பத்திரம் மற்றும் வில்லங்க சான்று இருந்தால் மட்டுமே அக்ரி ஸ்டாக்கில் பதிவு செய்யப்படுகிறது. வருவாய் துறையினரின் சான்றுகளை வேளாண் அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை. இதன் காரணமாக புதுச்சேரியில், 6,000 ஏக்கருக்கு நெல் உற்பத்தி மானியம் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இப்பிரச்னையில் முதல்வர் மற்றும் வேளாண் அமைச்சர் தலையிட்டு, புதுச்சேரி பிராந்தியத்தில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் உற்பத்தி மானியம் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.