தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : அக் 29, 2025 03:14 PM

தென்காசி: மத்திய பாஜ அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தென்காசியில் ரூ.141.6 கோடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.291 கோடியில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தூறலும், சாரலும் கொண்டு மக்களை குளிர்விக்கும் மண் தென்காசி. வடக்கே காசி என்றால், தெற்கே தென்காசி. தென்காசி கோவில் கும்பாபிஷேகம் 19 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக அரசியல் தான் நடைபெற்று உள்ளது.
தமிழகத்தை அனைத்து வகையிலும், அனைத்து துறைகளிலும் முன்னேற்றி வருகிறோம். எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களையும் வளர்த்து வருகிறோம். திமுக ஆட்சியில் வேளாண்மை உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையத்திலும் நாள்தோறும் 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
விரக்தியில் பழனிசாமி
ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இது எதுவும் தெரியாமல் பழனிசாமி பேசி வருகிறார். திராவிட மாடல் அரசுடன் மக்களுக்கு இருக்கிற நெருக்கம்தான் பலரை தூங்கவிடாமல் செய்துள்ளது. அதனால்தான், நாள்தோறும் அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். அதிலும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டார். விரத்தியின் உச்சியில் தொடர்ந்து பழனிசாமி பேசிக் கொண்டிருக்கிறார். பொய்யையும், துரோகத்தையும் தவிர வேறு எதையும் பழனிசாமியிடம் எதிர்பார்க்க முடியாது. அவரின் வரலாறே அதுதான்.
ரூ. 37,000 கோடி
மக்களை மகிழ்விக்கவே இந்த ஆட்சி. மக்களை காக்கவே இந்த ஆட்சி. மக்களை வளர்க்கவும், மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி. இந்த நான்கையும், நான்காண்டு காலமாக செய்து வருகிறோம். நாங்கள் எப்போதும் மக்களை நினைத்து ஏங்குவதால் தான் மக்களாகிய நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மூலம் ஓட்டுகளை திருட பாஜ முயற்சிக்கிறது. பாஜ திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. வேறுபாடுகளை கடந்து அனைத்துக்கட்சிகளும் பங்கேற்க வேண்டும். தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ. 37,000 கோடி நிதியை மத்திய பாஜ அரசு கொடுக்க மறுக்கிறது.
வாக்குரிமை
கொடுத்தால் தமிழக வளர்ச்சி அடைந்துவிடும் என்பதால் தான். ஆனாலும் திமுக அரசு மக்களை காக்கும். மக்களைக் காக்க திமுக அரசுக்கு யாரும் சொல்லித் தர வேண்டியது இல்லை.பேரிடர் நிதியை கூட மத்திய அரசு தரவில்லை. மத்திய பாஜ அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமை தான் அதை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம். வாக்கு திருட்டு போன்ற பாஜவின் முயற்சிகளை முறியடிப்போம். தமிழக மக்களின் வாக்குரிமையை காப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
10 புதிய அறிவிப்புகள்
தென்காசிக்கு முதல்வர் ஸ்டாலினின் 10 புதிய அறிவிப்புகள்:
* தென்காசி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு ரூ.15 கோடியில் 11 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
* தென்காசி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும்.
* ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ.1 கோடி செலவில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
* சிவசைலத்தில் உள்ள கடனா அணை ரூ.4 கோடியில் சீரமைக்கப்படும்.
* அடவி நயினார் அணைத்திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியில் அணைக்கட்டுகள், கால்வாய்கள், குளங்கள் சீரமைக்கப்படும்.
* ரூ.52 கோடி மதிப்பீட்டில் தென்காசி மாவட்டத்திற்கு புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்.
* வீரகேரளம்புதூர் வட்டத்தில் உள்ள மாறாந்தை கால்வாய் ரூ.2 கோடி செலவில் சீரமைக்கப்படும்.
* வரட்டாறு ரூ.4 கோடி செலவில் தூர்வாரப்படும். தென்காசி விகே புதூர் 6ம் கால்வாய் சீரமைக்கப்படும்.
* தென்காசியில் கண்மாய்கள் ரூ.12 கோடியில் சீரமைக்கப்படும்.
* கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடம் கட்டி தரப்படும்.

