/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்! சட்டசபை உறுதிமொழிகள் கூட்டத்தில் விவாதம்
/
விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்! சட்டசபை உறுதிமொழிகள் கூட்டத்தில் விவாதம்
விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்! சட்டசபை உறுதிமொழிகள் கூட்டத்தில் விவாதம்
விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்! சட்டசபை உறுதிமொழிகள் கூட்டத்தில் விவாதம்
ADDED : பிப் 14, 2024 03:47 AM

புதுச்சேரி சட்டசபை உறுதிமொழிகள் குழுவின் கூட்டம் தலைமைச் செயலக கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது. சபாநாயகர் செல்வம் முன்னிலையில் நடந்த கூட்டத்துக்கு, உறுதிமொழிகள் குழுவின் தலைவர் நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
குழுவின் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், கென்னடி, அசோக்பாபு, சிவசங்கர், சட்டசபை செயலர் தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வேளாண் மற்றும் விவசாயிகள் நலம், கால்நடை பராமரிப்பு, வனம், இந்துசமய நிறுவனங்கள் மற்றும் வக்ப் ஆகிய துறைகளில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சட்டசபையில் அளித்த உறுதிமொழிகளின் நிறைவேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
விவசாயிகளின் கூட்டுறவு கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். கடனை தள்ளுபடி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, கூட்டுறவுத் துறை தான் கடனை தள்ளுபடி செய்ய முடியும் என விவசாயத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொள்ளாத உறுதிமொழி குழுவினர், இதுவரை அரசாணை வெளியிடாததால் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் 3 ஆண்டுகளாக கடன் பெற முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளதை சுட்டிக் காட்டினர்.
இரண்டு துறை அதிகாரிகளும் கலந்து பேசி, விவசாய கடன்களை விரைவில் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.அடுத்ததாக, காரைக்காலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் 435 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து உறுதிமொழிகள் குழுவினர் கேள்வி எழுப்பினர். மத்திய அரசு அதிகாரிகளுடன் பேசி, காரைக்கால் விவசாயிகளுக்கு காப்பீடு தொகையை விரைவில் பெற்று தர வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். காட்டுப் பன்றிகள் விவசாய நிலத்தை சேதமாக்கும் பிரச்னைக்கு தீர்வு காணவும் கூறினர்.
கால்நடை ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது குறித்து கேள்வி எழுப்பிய குழுவினர், தேவையான எண்ணிக்கையிலான டிரைவர்கள், ஊழியர்களை நியமித்து ஆம்புலன்ஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்தனர்.மேலும், மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படும் கால்நடை டாக்டர்கள் பலர் புதுச்சேரியில் பணிபுரிய விரும்பாமல் சென்று விடுகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, உள்ளூர் கால்நடை டாக்டர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தலாம் எனவும் எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை தெரிவித்தனர்.
வேதபுரீஸ்வரர் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் தொடர்பான நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பழுதடைந்த கோவில்களை புனரமைப்பதற்கு தேவை உதவிகளை இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனுக்குடன் வழங்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏ.,க்கள் கேட்டுக் கொண்டனர்.
கூட்டத்தில் அரசு செயலர் ஜெயந்தகுமார் ரே, விவசாயத்துறை இயக்குனர் வசந்தகுமார், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர், இந்துசமய அறநிலையத்துறை இயக்குனர்
சிவசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

