/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் ஓராண்டாகியும் புனரமைப்பு நடவடிக்கை இல்லை
/
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் ஓராண்டாகியும் புனரமைப்பு நடவடிக்கை இல்லை
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் ஓராண்டாகியும் புனரமைப்பு நடவடிக்கை இல்லை
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் ஓராண்டாகியும் புனரமைப்பு நடவடிக்கை இல்லை
UPDATED : டிச 07, 2025 06:26 AM
ADDED : டிச 07, 2025 06:25 AM

பா கூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் நடுத்திட்டு பகுதியில் சுமார் 30 ஏக்கர் அளவிற்கு வேர்க்கடலை மற்றும் கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வந்தன.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நடுத்திட்டு வயல்வெளி பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
நிலத்தின் மேல் பரப்பில் சுமார் 3 அடி உயரத்திற்கு இருந்த வளம் மிகுந்த வண்டல் மண் நீரில் அடித்து செல்லப்பட்டு நிலத்தின் தன்மையே மாறி விட்டது.
அங்கிருந்த பாசனத்திற்கான போர்வேல் மற்றும் மோட்டார் கொட்டகைகளும், மின் கம்பங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு தரை மட்டமாகியது. இதனால், அப்பகுதி விவசாயிகள் அங்கு எந்த விதமான பயிர்களும் பயிரிட முடியாத நிலையில் கவலையில் மூழ்கினர்.
மண் அரிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கிட வேண்டும். வேளாண் பாசனத்திற்கான, மின் பாதையை உடனடியாக சீரமைத்திட வேண்டும். நிலத்தையொட்டி, வெள்ளத்தடுப்பு அவர் அமைத்திட வேண்டும். ஆற்றில் வெள்ள நீரோட்டத்திற்கு தடையாக இருக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றிட வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைக்கு இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் செவி சாய்க்கவில்லை.
விவசாயிகளே தங்களது சொந்த செலவில், புல்டோசர் மூலமாக, முடிந்த அளவிற்கு நிலத்தை சமன் செய்தனர். ஆனால், மின்சார வசதி இல்லாததால், பாசன நீரின்றி விளைநிலங்கள் தரிசாகவே கிடக்கிறது.
வேளாண் வளர்ச்சியை ஏற்படுத்தி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், வேளாண் துறைக்கு ரூ.216.87 கோடி, மின்துறைக்கு ரூ.2,904.39 கோடி கடந்த பட்ஜெட்டில், முதல்வர் ரங்கசாமி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இருப்பினும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட சோரியாங்குப்பம் நடுத்திட்டு விளை நிலங்களில், பாசன மோட்டார்களுக்கான மின் வழித்தடத்தை, அரசால் சீரமைக்க முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது.

