காலிமனையை கிரயம் செய்து தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி தந்தை, மகன்கள் மீது வழக்கு பதிவு
காலிமனையை கிரயம் செய்து தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி தந்தை, மகன்கள் மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 22, 2026 07:51 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் காலிமனையை கிரயம் செய்து தருவதாக கூறி ரூ. 7 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
புதுசாரம், சின்னையன்பேட், ஜெயராமன் நகரை சேர்ந்தவர் சிவராமன், 55. இவர், வெங்கட்டா நகர் விரிவாக்கம், திருமுடி சேதுராமன் நகரில் 2,100 சதுரஅடி காலிமனையை வாங்க முடிவு செய்து, புதுச்சேரி, ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த சுப்ரமணியன், அவரது மகன்கள் வேலு, நரேன் ஆகியோரிடம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி கிரய அச்சார உடன்படிக்கை செய்தார்.
அதில், கிரயத்தொகையாக 49 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் பேசப்பட்டு, முன் தொகையாக ரூ. 7 லட்சத்தை சுப்ரமணியன், அவரது மகன்களிடம் கொடுத்து, அடுத்த 3 மாதத்திற்குள் கிரயம் செய்து கொடுக்கும்படி கூறியுள்ளார்.
பின், சிவராமன் காலிமனையை தனது பெயரில் கிரயம் செய்து கொடுக்கும்படி, சுப்ரமணியன், அவரது மகன்கள் வேலு, நரேன் ஆகியோரிடம் கேட்டபோது, பல்வேறு காரணங்களை கூறி கிரயம் செய்து கொடுக்காமல் அலைகழித்து வந்தனர். இதனால், சந்தேகமடைந்த சிவராமன் அந்த காலிமனை குறித்து விசாரித்தபோது, அதனை சுப்ரமணியன் மற்றும் அவரது மகன்கள் இணைந்து, கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதியே நடராஜன் என்பவருக்கு கிரயம் செய்து கொடுத்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சிவராமன் பெரியக்கடை போலீசில், காலிமனையை தனக்கு கிரயம் செய்து கொடுப்பாக கூறி ரூ. 7 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சுப்ரமணியன், அவரது மகன்கள் வேலு, நரேன் ஆகியோர் மீது புகார் அளித்தார். அதன்பேரில், அவர்கள் மூவர் மீதும் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
