/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏழை மாணவர்களின் கல்வி செலவை ஏற்ற பாத்திமா பள்ளி முன்னாள் மாணவர்கள்
/
ஏழை மாணவர்களின் கல்வி செலவை ஏற்ற பாத்திமா பள்ளி முன்னாள் மாணவர்கள்
ஏழை மாணவர்களின் கல்வி செலவை ஏற்ற பாத்திமா பள்ளி முன்னாள் மாணவர்கள்
ஏழை மாணவர்களின் கல்வி செலவை ஏற்ற பாத்திமா பள்ளி முன்னாள் மாணவர்கள்
ADDED : ஜூலை 05, 2025 04:44 AM

புதுச்சேரி: பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் பாத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அப்பள்ளியிலேயே மேற்படிப்பு பயில உதவித்தொகை வழங்கப்பட்டது.
கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தும், வறுமை காரணமாக வேறு பள்ளிகளுக்கு செல்வது அதிகரித்தது.
இதனை கண்ட இப்பள்ளியில் 1990ம் ஆண்டு பிளஸ் 2 -ஏ குரூப் படித்த மாணவர்கள், நலச்சங்கத்தை ஏற்படுத்தி, கடந்த 2014ம் ஆண்டு முதல், ஏழை மாணவர்கள் இப்பள்ளியிலேயே கல்வியை தொடர உதவி வருகின்றனர்.
இதன் காரணமாக பள்ளியின் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையும், உதவித் தொகை பெற்று படிப்பை தொடர பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுப்பதும் கணிசமாக அதிகரித்துள்ளது.
அந்த வகையில், 12ம் ஆண்டு மாணவர்களின் கல்வி செலவை ஏற்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
முன்னாள் மாணவர்களை அறிமுகப்படுத்தி பள்ளி முதல்வர் மகிமை பேசுகையில், 'கடந்த 35 ஆண்டுகளுக்கு முன், இதே பள்ளியில் காலை அணி வகுப்பில் இந்த முன்னாள் மாணவர்கள் நின்றிருந்தனர்.
தங்களது கடின உழைப்பினால் விஞ்ஞானி, டாக்டர், இன்ஜினியர் என பல் வேறு துறைகளில் சாதித்து, முன்மாதிரியாக விளங்குகின்றனர். வாழ்வில் ஏற்றி விட்ட ஏணியான பள்ளியும், ஆசிரியர்களையும் நன்றி மறக்காமல் இன்றைக்கு மீண்டும் பள்ளிக்கு வந்து உதவுகின்றனர். இது தான் வாழ்வின் படிப்பு' என்றார்.
உதவித் தொகை
பத்தாம் வகுப்பில் இந்தாண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சஞ்சய்-469, குருநாத்-468, சபின்-448, முகமது தவீத் 435 ஆகியோருக்கு பாத்திமா பள்ளியில் படிப்பினை தொடர 60 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
மாணவர்கள் கவுரவிப்பு
கடந்த 2022-23ம் கல்வியாண்டில் கல்வி ஊக்கத் தொகை பெற்று பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சக்திவேல் -544, தாருகேசன்-505, சிவனேஷ்குமார்-463, கமலேஷ்-473 ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
நோக்கவுரையாற்றிய புதுச்சேரி கல்வித் துறை ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ பேசும்போது, பாத்திமா மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் மேல் கல்வியும் இப்பள்ளிலேயே பயில வேண்டும் என்பதற்காகவே கல்வி உதவி திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
நாங்கள் படித்த இப்பள்ளியை மறக்க மாட்டோம்; பள்ளியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம். மாணவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கி வாழ்வில் உயரிய நிலையை அடைய வேண்டும்' என்றார்.
சிறப்பு விருந்தினர் அமெரிக்க கலிபோர்னியா மாற்றுத்திறனுடையவர்களுக்கான மறுவாழ்வு மைய இயக்குநர் மேத்யூ அண்டரஸ் சிறப்புரையாற்றினார்.
விழானை பள்ளியின் முன்னாள் மாணவர்களான ஆஸ்திரேலியா மனநல மருத்துவர் வைத்தியநாதன், மென்பொருள் கம்பெனி மேலாளர் சத்தியநாராயணன், அமெரிக்காவில் வசிக்கும் பேராசிரியர் மேத்யூ அண்டரஸ், மென்பொருள் பொறியாளர் ராஜபிரசாத், சீதாராமன், குஜராத் விஞ்ஞானி ரவிபிரகாஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கட்டட பொறியாளர் மேத்யூஸ் ஆரோக்கியசாமி, இளநிலை பொறியாளர் தணிகைவேல் ஆகியோர் செய்திருந்தனர்.