ADDED : ஆக 17, 2026 08:42 PM
புதுச்சேரி: புதுவை தமிழ்ச்சங்கத்தில், மலேசிய தமிழ் அறிஞர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
மலேசிய தமிழர் சமூக பண்பாட்டு நட்புறவு இயக்கத்தினர் சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி, காரைக்கால், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி என பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.
புதுச்சேரிக்கு வருகை தந்த இவர்கள், இங்குள்ள பல்வேறு சிறப்பு வாய்ந்த இடங்களை பார்வையிட்டு, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். இவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடந்தது.
விழாவில், சங்க தலைவர் முனைவர் முத்து தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் ஜெயபால் கலந்து கொண்டு, மலேசிய தமிழ் அறிஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அவர், மலேசிய தமிழறிஞர் சீராகி எழுதிய ‘ஜாலியானந்தா’ எனும் நுாலினை வெளியிட, தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து பெற்றுக்கொண்டார். இக்குழுவிற்கு, நட்புறவுக் கழகத் தலைவர் மணிவாசகம் தலைமை ஏற்று அழைத்து வந்தார்.
மலேசிய தமிழர்கள் தங்கள் நாட்டின் தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழின் வளர்ச்சி, தமிழ்க் கல்வி உள்ளிட்ட சிறப்புகளை எடுத்துரைத்தனர்.
முன்னதாக, செயலர் சீனு மோகன் தாஸ் வரவேற்றார். நக்கீரர் தமிழ் சங்க தலைவர் பாஸ்கரன் நோக்கவுரையாற்றினார்.
பார்வை மாற்றுத்திறனாளி மலர்விழி ராஜேந்திரன் பாடிய பாடல் அனைவரையும் கவர்ந்தது. பேராசிரியர் ராமலிங்கம் அறிமுக உரையாற்றினார்.
விழாவில், கோபாலகிருஷ்ணன், பொறியாளர் பாலசுப்பிரமணியன், பொருளர் அருள் செல்வம், மல்லை பூபதி, கவிஞர் ஆனந்தராசன், அருள்ராஜ் உள்ளிட்ட தமிழறிஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
