பாகூர் துணை மின் நிலையத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்
பாகூர் துணை மின் நிலையத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்
ADDED : ஆக 17, 2026 08:52 PM
பாகூர்: பாகூர் துணை மின் நிலையத்தில், புதியதாக நிறுவப்பட்டுள்ள பவர் டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
புதுச்சேரி – கடலுார் சாலை காட்டுக்குப்பத்தில் பாகூர் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த துணை மின் நிலையத்தில், ஏற்கனவே இருந்த மூன்று பவர் டிரான்ஸ்பார்மர்களில் ஒன்று முழுவதுமாக பழுதாகி பயன்பாட்டின்றி போனது.
மீதமுள்ள இரண்டு பவர் டிரான்ஸ்பார்மர்கள் மூலமாகவே மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால்,
மின்சார தட்டுப்பாடு, மின் தடையால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, மின்துறை சார்பில், ஒரு கோடியே 18 லட்சத்து 68 ஆயிரத்து 936 ரூபாய் செலவில், புதியதாக 16 எம்.வி.ஏ., திறன் கொண்ட பவர் டிரான்ஸ்பார்மர், துணை மின் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்பாட்டிற்கு அர்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பாகூர் தொகுதி தி.மு.க, எம்.எல்.ஏ., செந்தில்குமார், ஏம்பலம் தொகுதி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., மோகன்தாஸ், மணவெளி தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ., ராமு ஆகியோர் இணைந்து புதிய பவர் டிரான்ஸ்பார்மருக்கு பூஜைகள் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இந்நிகழ்ச்சியில், மின்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், செயற்பொறியாளர் உமேஷ்சந்திரா, உதவி பொறியாளர்கள் அன்பழகன், ஜேம்ஸ் மரியா பிராங்கிளின், இளநிலை பொறியாளர்கள் அரிபுத்திரி, பிரபுராம், ராம்குமார், ருத்ரமூர்த்தி, பாரதி மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
