/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனைத்து அரசு துறைகளுக்கும் நிதித் துறை ... கிடுக்கிபிடி: ஜெம் போர்ட்டலில் மட்டும் கொள்முதல் செய்ய உத்தரவு
/
அனைத்து அரசு துறைகளுக்கும் நிதித் துறை ... கிடுக்கிபிடி: ஜெம் போர்ட்டலில் மட்டும் கொள்முதல் செய்ய உத்தரவு
அனைத்து அரசு துறைகளுக்கும் நிதித் துறை ... கிடுக்கிபிடி: ஜெம் போர்ட்டலில் மட்டும் கொள்முதல் செய்ய உத்தரவு
அனைத்து அரசு துறைகளுக்கும் நிதித் துறை ... கிடுக்கிபிடி: ஜெம் போர்ட்டலில் மட்டும் கொள்முதல் செய்ய உத்தரவு
ADDED : ஆக 28, 2025 02:07 AM

புதுச்சேரி: மத்திய அரசின் ஜெம் போர்ட்டல் வழியாகவே இனி, அரசு துறைகள் அனைத்தும் கொள்முதல் செய்ய வேண்டும் என,நிதித் துறை கிடுக்கிபிடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் ஒரு ஒருங்கிணைந்த மின்-வணிக தளமாக ஜெம் போர்ட்டல் உள்ளது. இந்த தளம் வழியாக தான் மத்திய, மாநில அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு அமைப்புகளால் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்யப்பட வேண்டும். 2016ல் துவங்கப்பட்ட இந்தத் தளம், வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பான முறையிலான கொள்முதலை உறுதிசெய்கிறது. அத்துடன் காகித தாள் இல்லாத நடைமுறை, டிஜிட்டல் பண பரிவர்த்தனை, கணினி மயமாக்கப்பட்ட செயல்முறைகளை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஜெம் போர்ட்டல் வழியாக தான், புதுச்சேரி அரசின் 54 அரசு துறைகள் தங்களுக்கு தேவையான பொருட்கள், சேவைகளை டெண்டர் வழியாக பெற்று வருகின்றன. இருப்பினும் சமீப காலமாக ஜெம் போர்ட்டலை தவிர்த்துவிட்டு வேறுவழிகளில் நேரடியாக பொருட்களை பெற ஆர்வம் காட்டி வருகின்றன.
ஜெம் போர்ட்டலில் புதுச்சேரி அரசுக்கு தேவையான பொருட்கள் கிடைத்தாலும், வெளி சந்தையில் வாங்க ஆர்வம் காட்டுவதாக நிதித் துறைக்கு புகார் சென்ற நிலையில், அனைத்து அரசு துறைகளுக்கு தற்போது அவசர சுற்றிக்கை அனுப்பியுள்ளது.
அதில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பல அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பாக, மின்சாரம், சிவில் சப்ளைஸ், போக்குவரத்து, பள்ளிக் கல்வி, டிஸ்டில்லரீஸ் துறைகள் ஜெம்போர்ட்டலுக்கு வெளியே குறிப்பிடத்தக்க கொள்முதல்களை செய்துள்ளதாக கவனத்திற்கு வந்துள்ளது.
இனி, மத்திய அரசின் உத்தரவினை பின்பற்றி, புதுச்சேரி அரசின் கீழ் உள்ள அனைத்து அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், ஜெம் போர்ட்டலில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை கண்டிப்பாக கொள்முதல் செய்ய வேண்டும்.
ஜெம் போர்ட்டலில் கிடைக்கும் பொருட்கள், சேவை வகைளை எந்த காரணத்தை கொண்டும் கண்டிப்பாக வெளியே கொள்முதல் செய்யப்படக்கூடாது. புதுச்சேரியில் கணிசமான எண்ணிக்கையிலான கைவினைப் பொருட்கள் இருப்பதால், கைவினைஞர்களை ஜெம்போர்ட்டலில் இணைத்துக்கொள்ளலாம். இது நேரடி கொள்முதல் சந்தைப்படுத்தல் வாய்ப்பைத் திறக்கும் என, உத்தரவிட்டுள்ளது.
என்ன பிரச்னை ஜெம் போர்ட்டலில் புதுச்சேரியைச் சேர்ந்த 12,000 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் உள்ளனர். இருப்பினும், 3,000 விற்பனையாளர்கள் மட்டுமே இப்போர்ட்டலில் சுயவிவரத்தை பூர்த்தி செய்திருந்தனர். இதன் காரணமாகவே ஜெம்போர்ட்டலில் புதுச்சேரி அரசு துறைகளுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மாநிலம் முழுதும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி புதுச்சேரியை சேர்ந்த விற்பனையாளர்களை முழு விபரங்களுடன் ஜெம் போர்ட்டலில் முழுவதுமாக இணைக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.