/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விபத்தில்லா தீபாவளி கொண்டாட தீயணைப்பு துறை வழிமுறை வெளியீடு
/
விபத்தில்லா தீபாவளி கொண்டாட தீயணைப்பு துறை வழிமுறை வெளியீடு
விபத்தில்லா தீபாவளி கொண்டாட தீயணைப்பு துறை வழிமுறை வெளியீடு
விபத்தில்லா தீபாவளி கொண்டாட தீயணைப்பு துறை வழிமுறை வெளியீடு
ADDED : அக் 19, 2025 02:57 AM
புதுச்சேரி கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ கூறியதாவது:
புதுச்சேரியில், தீபாவளி பண்டிகையில் உயரே சென்று வெடிக்கும் ராக்கெட், அவுட் போன்ற பட்டாசுகள் மற்றும் சீன பட்டாசுகள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி உபயோகித்து அதனால் உயிர்சேதம் பொருட்சேதம் ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டாசுகளை நடு வீதியில் வைத்து கொளுத்துவது ஆபத்தானது. சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் உடனிருப்பது பாதுகாப்பானது.
நீண்ட ஊதுபத்தி உபயோகித்து பக்கவாட்டில் நின்று பட்டாசு கொளுத்த வேண்டும். கம்பி மத்தாப்பு போன்றவற்றை எரித்த பின்பு தண்ணீரில் போட வேண்டும்.
பட்டாசுகளை வீடுகளில் வைத்திருக்கும்போது தீப்பொறி மற்றும் விளக்கு ஆகியவற்றை அதனருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பட்டாசுகளை வெடிக்கும்போது அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்திருப்பது பாதுகாப்பானது.
வெடிக்காத புகைந்துபோன பட்டாசுகளை நீண்ட குச்சியால் மட்டுமே அப்புறப்படுத்தவேண்டும்.
பட்டாசுகளை வெடிக்கும்போது குழந்தைகள் பருத்தியாடைகள் மற்றும் காலணிகளை அணிந்திருப்பது பாதுகாப்பானது.
குடிசைப்பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கண்ணாடி பாட்டில், தேங்காய் சிறட்டை, தகரடப்பா இவற்றினுள் பட்டாசுகளை வைத்து வெடிக்கக்கூடாது. அப்படி வெடித்து சிதறும் துகள்கள் நம்மையும் அறியாமல் உடலில் பட்டு ஆபத்தை ஏற்படுத்தும்.
சரவெடிகள் வெடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்த வேண்டாம்.
பட்டாசுகளை அடுப்பின் அருகிலோ அல்லது பூஜை அறை அருகிலோ வைப்பதை தவிர்க்கவும். பட்டாசுகளை வாங்கும்போது தரமான பட்டாசுதானா என்று உறுதி செய்து வாங்கவும். தரமற்ற நாட்டு வெடிகளை வாங்குவதை தவிர்க்கவும்.
பட்டாசுகளை பள்ளி, மருத்துவமனை மற்றும் முதியோர் இல்லம் போன்ற இடங்களில் வெடிப்பதைத் தவிர்க்கவும்.
வீடுகள் அதிகம் இல்லாத பகுதி மற்றும் திறந்தவெளி இடங்களில் வெடிப்பது அனைவருக்கும் பாதுகாப்பானது.
பலகாரங்கள் செய்யும்போது சிறுவர்களை அருகாமையில் அனுமதிப்பதைத் தவிர்க்கவும். பலகாரம் செய்யும்போது தற்செயலாக வாணலில் தீ ஏற்பட்டால் அதை அதற்கு தகுந்த மூடியைக்கொண்டு மூடி தீயை அணைக்கவும்.அதைத் தவிர்த்து தண்ணீரை ஊற்றி அணைக்க முற்படுவதைத் தவிர்க்கவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீக்காயம் ஏற்பட்டால்
குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ தீக்காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் குளிர்ந்த நீரை அந்த வெப்பம் குறையும் வரை ஊற்ற வேண்டும். பின்பு அந்த இடத்தை மெல்லிய பருத்தியாலான துணியால் மூடி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும்.
அதைத்தவிர்த்து அந்த இடத்தில் 'இங்க்' அல்லது மாவு போன்றவற்றை ஊற்றுவதைத் தவிர்க்கவும்.