வனப்பகுதியில் தீ விபத்து மூங்கில் மரங்கள் எரிந்து சேதம்
வனப்பகுதியில் தீ விபத்து மூங்கில் மரங்கள் எரிந்து சேதம்
ADDED : ஜூலை 12, 2026 03:36 AM

புதுச்சேரி: காட்டேரிக்குப்பத்தில் வனத்துறை பராமரிப்பில் உள்ள வனப்பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் மூங்கில் மரங்கள் எரிந்து சேதமடைந்தன.
புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் ஏரியையொட்டி, சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வனப்பகுதியை அரசு வனத்துறை பராமரித்து வருகிறது. இங்கு, நுாற்றாண்டுகள் கடந்த பழமையான மரங்கள், மூலிகை செடிகள், மூங்கில் மரங்கள் உள்ளிட்டவை உள்ளன. மேலும், மான், முயல்கள், மயில், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளும் வசித்து வருகின்றன.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியை பராமரிக்க போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தால், சமூக விரோதிகள் சிலர் வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சென்று மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம் 2 மணி அளவில் வனப்பகுதியின் மூங்கில் நிறைந்த இடத்தில் மரங்கள் திடீரென தீ பிடித்து எரிந்தது.
தகவலறிந்த திருக்கனுார், சேதராப்பட்டு, கோரிமேடு, வில்லியனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் வாகனங்களில், விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், காற்று மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். இருப்பினும், ஒரு வழியாக 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மாலை 6:30 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து காட்டேரிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
