பழைய இரும்பு கடையில் தீ விபத்து ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம் தனியார் பள்ளிக்கு விடுமுறை
பழைய இரும்பு கடையில் தீ விபத்து ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம் தனியார் பள்ளிக்கு விடுமுறை
ADDED : ஜூலை 07, 2026 04:59 AM

காரைக்கால்: காரைக்கால் நெடுங்காடு சாலையில் உள்ள பழைய இரும்புக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சம்பலானது.
காரைக்கால் நெடுங்காடு சாலை அம்பேத்கர் நகர் அருகே அதே பகுதியை சேர்ந்த செல்வம், பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் வாங்கிய பழைய பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்கள், அட்டைகளை மூட்டைகளாக கட்டி கடை அருகே அடுக்கி வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் இரும்புக்கடையில் திடீரென தீ பிடித்து எரியத் துவங்கியது. கடையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களில் தீ பரவியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால், அருகில் இயங்கிய தனியார் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்து காரைக்கால் மற்றும் சுரக்குடியில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள பழைய இரும்பு, பிளாஸ்டிக், அட்டை உள்ளிட்ட பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின.
இந்த விபத்தில் கடையில் இருந்த ரூ.5லட்சம் மதிப்புள்ள பழைய இரும்புபொருட்கள் எரிந்து சேதமானது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து நெடுங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
