/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர்கள் மறியல் : போக்குவரத்து பாதிப்பு
/
மீனவர்கள் மறியல் : போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 09, 2025 11:24 PM

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் அருகே 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மீனவர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன், சாலை மறியலில் ஈடுபட்டதால், கடலுார் - புதுச்சேரிசாலையில் போக்குவரத்து பாதித்தது.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு தெற்கு மற்றும் வடக்கு என இரு பஞ்சாயத்துக்கள் செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள தில்லையம்மன் கோவில் திரு விழாவை, இரண்டு பஞ்சாயத்து மீனவர்கள் கடந்த 70 ஆண்டுகளாக, ஒற்றுமையாக நடத்தி வந்தனர். இந்த ஆண்டு திருவிழாவை, இரு பஞ்சாயத்தினர் தனித் தனியே நடத்தினர். அதில் இருந்து பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில், நல்லவாடு வடக்கு பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரது படகு இன்ஜின் மீது, மண் அள்ளி போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவர், தவளக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன், வழக்குப் பதிந்து, நேற்று முன்தினம் இரவு, நல்லவாடு பகுதியை சேர்ந்த கார்த்தீபன், 52; விஜி, 42; சபரி, 38; ஆகியோரை கைது செய்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த மீனவர்கள், தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று காலை 6:00 மணியளவில் குவிந்து, எப்படி 3 பேரை கைது செய்யலாம் என கேட்டு, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
அவர்களை கைது செய்ததை கண்டித்து, மீனவர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின், அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், கடலுார் - புதுச்சேரி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.