/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீன் பிடி படகுகள் கணக்கெடுப்பு பணி
/
மீன் பிடி படகுகள் கணக்கெடுப்பு பணி
ADDED : மே 01, 2025 04:46 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி படகுகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
மத்திய மீன்வளத்துறை அமைச்சகம், மீன்பிடி படகுகளை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தார், மக்கள் குழு, கோவில் நிர்வாக குழு, பைபர் படகு உரிமையாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடன், இயந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகு, கட்டு மரம் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. மீன் வளத்துறை அதிகாரிகள் படகுகளை கணக்கெடுப்பு செய்யும் பணியை நடத்தினர்.
புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் கடந்த ஆண்டு 6 ஆயிரத்து 457 படகுகள் பதிவாகியிருந்தது. இந்த படகுகள் மீன் பிடியில் ஈடுபடுத்தப்படுகிறதா? என கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. புதிதாக படகுகள் சேர்க்கும் பணியும் நடக்கிறது. இவை அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
கணக்கெடுப்பால் மீனவர்களுக்கான உதவிகள் முறையாக சேரும். புதுச்சேரியில் 17, மாகேவில் 4, ஏனாமில் 8 மீனவ கிராமத்தில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் காரைக்காலில் கணக்கெடுப்பு பணி துவங்குகிறது. கடலோர பாதுகாப்பை உறுதிபடுத்தவும், எல்லை தாண்டி படகுகள் செல்வதை தடுக்கவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.