ADDED : செப் 16, 2026 06:31 AM

புதுச்சேரி: புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., - காங்., - இ.கம்யூ., - தி.மு.க., - நா.த.க., என, ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., சார்பில், தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டார்.
இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர், தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, தட்டாஞ்சாவடி தொகுதிக்கு அடுத்த மாதம் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், என்.ஆர்.காங்., வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க., சார்பில் சேது செல்வம் போட்டியிடுகிறார்.
அதேபோல், தமிழகத்தில், த.வெ.க., அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் இந்திய கம்யூ., கட்சி சார்பில், அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலர் சலீம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக கார்த்திக் குமாரி களமிறங்குகிறார்.
என்.ஆர்.காங்., - இ.கம்யூ., - தி.மு.க., - நா.த.க., ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள், தங்கள் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பாக, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் விநாயகம் போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
