பாம்புகளை பிடிக்க வனத்துறை ஊழியர்கள் 'ஷிப்ட்' முறையில் நியமனம்
பாம்புகளை பிடிக்க வனத்துறை ஊழியர்கள் 'ஷிப்ட்' முறையில் நியமனம்
ADDED : ஜூன் 14, 2026 09:46 AM
புதுச்சேரி: புதுச்சேரி பொது இடங்களில் பாம்புகளை பிடிக்க வனத்துறை 'ஷிப்ட்' முறையில் ஊழியர்களை நியமித்து, மொபைல் எண்களை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பொது இடங்களில் சுற்றித்திரியும் பாம்புகள் அருகில் உள்ள அரசு அலுவலகங்கள், வீடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றன.
அதன் காரணமாக, அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து உள்ளனர்.
இதனால், அலுவலகங்கள் மற்றும் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளை பிடிக்க புதுச்சேரி வனத்துறை சுழற்சி முறையில் முதல் ஷிப்ட் (காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை), இரண்டாவது ஷிப்ட் (மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை), மூன்றாவது ஷிப்ட் (இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை) பொது ஷிப்ட் (காலை 8:45 மணி முதல் மாலை 5:45 மணி வரை), இரவு ஷிப்ட்(மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை) என 5 ஷிப்ட்களை அமைத்து ஊழியர்களை நியமித்துள்ளது.
அதன்படி, பொதுமக்கள் தங்களது பகுதிகளில் பாம்புகளை பிடிக்க வனத்துறையின் மஸ்துார் ஊழியர்கள் கோபி-99948 13931, சக்திவேல்-90474 59567, வேலாயுதம்- 96005 73080, நாகராஜன்- 97867 04949, வாழ்முனி- 99445 40256 மற்றும் ஊழியர்களின் பொறுப்பு அதிகாரி சீனிவாசன்- 93626 64429 ஆகியோரை மொபைல் எண்ணிகளில் தொடர்பு கொள்ளலாம்.
இதனிடையே நேற்று ஒரே நாளில் வனத்துறை ஊழியர்கள் 10 பாம்புகளை பிடித்தனர்.
