/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பனை மரம் மீட்டெடுப்பில் அசத்தும் வனத்துறை; இலக்கு 10 லட்சம்; எட்டியது 6.50 லட்சம்
/
பனை மரம் மீட்டெடுப்பில் அசத்தும் வனத்துறை; இலக்கு 10 லட்சம்; எட்டியது 6.50 லட்சம்
பனை மரம் மீட்டெடுப்பில் அசத்தும் வனத்துறை; இலக்கு 10 லட்சம்; எட்டியது 6.50 லட்சம்
பனை மரம் மீட்டெடுப்பில் அசத்தும் வனத்துறை; இலக்கு 10 லட்சம்; எட்டியது 6.50 லட்சம்
ADDED : அக் 19, 2025 11:47 PM

தென்னையை வெச்சவன் தின்னுட்டு சாவான். பனையை வெச்சவன் பாத்துட்டு சாவான்னு' பழமொழி உண்டு. ஆனால் புதுச்சேரியில், நாம் பார்த்துக்கொண்டு இருக்குபோதே நம் கண்முன்னே புனித மரமாக கருதப்படும் பனை மரங்கள் சகட்டு மேனிக்கு மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றன. இன்றைக்கு பனை மரங்களை காண்பதே புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் அரிதாகி விட்டது.
காணாமல் போன பனைமரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கில் கடந்தாண்டு 10 லட்சம் பனைங் கொட்டைகளை நடும் திட்டத்தை வனத்துறை துவக்கியது. இது சாத்தியப்படுமா; நடைமுறையில் இது சாத்தியமாகுமா என்றெல்லாம் பல்வேறு கேள்விக்கணைகளும் வனத் துறையை நோக்கி எழுந்தன.
ஆனால், வனத்துறை கையில் எடுத்த இத்திட்டம் தற்போது புதுச்சேரியின் பசுமையின் புரட்சியாக மாறியுள்ளது. இதுவரை 6.50 லட்சம் பனைங் கொட்டைகளை புதிதாய் மண்ணில் வேரூன்றி, வானத்தை நோக்கி துளிர்விடத் துவங்கியுள்ளன.
பனைங்கொட்டைகள் புதுச்சேரியில் கிடைப்பதில்லை என்றாலும், வனத்துறை தனது முயற்சியை நிறுத்தவில்லை. வனத்துறை அதிகாரிகள் வெகு துாரமாக தர்மபுரி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்கு வாகனங்களுடன் ஆட்களை அனுப்பி பனம்பழங்களை வாங்கி வந்து விதைகளாக்கி மண்ணில் விதைத்து வருகின்றது.
புதுச்சேரியில் மண்ணில் விதைக்கப்படும் ஒவ்வொரு பனை விதையும், நாளைய பசுமை புரட்சியின் முதற்கொம்பாக இனி இருக்கும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. வனத்துறை வியர்வை சிந்தி நடும் அந்தச் சிறிய விதை, ஒருநாள் வானத்தைத் தழுவும் பெருமரமாக மாறும். அதன் நிழலில் குழந்தைகள் விளையாடும்; அதன் பனம்பழம் இனிப்பாய் பகிரப்படும்; அதன் இலைகள் வீடுகளை மூடியும், அதன் நிழல் மனங்களைக் குளிர்வித்தும் நிற்கும் என நம்பிக்கையுடன் அடித்து சொல்கின்றனர் வனத் துறை ஊழியர்கள். பனைவிதை விதைப்பு பணிகளை பார்வையிட்ட வனத் துறை பாதுகாவலர் அருள்ராஜ் கூறுகையில், தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடையது பனைமரங்கள். ஒருகாலத்தில், பனைமரம் புதுச்சேரியின் உயிர் நரம்பாக இருந்தது. காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் அதன் இலைகள், ஊரின் அடையாளமாக, இயற்கையின் ஆசியென திகழ்ந்தன. ஆனால் காலம் மாறியது. பனை மரங்களை காண்பதும் அரிதாகிவிட்டது.
இதனால் தான் புதுச்சேரியில் அழிந்து வரும் பனை மரங்களை மீண்டும் மீட்டெடுப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரியை ஒரே நேரத்தில் நாலு குழுக்களாக பிரிந்து வேகமாக பனைவிதைகளை விதைத்து வருகிறோம். இதுவரை 6.50 லட்சம் பனை விதைகளை ஊன்றியுள்ளோம்.
குளக்கரைகள், கடற்கரைகள், அரசு இடங்கள் என பனை வளரக்கூடிய சாத்தியமுள்ள அனைத்து இடங்களையும் கண்டறிந்து மண்ணில் விதைகளை ஊன்றி வருகின்றோம். இதற்கு கைமேல் பலனும் கிடைத்துள்ளது. அவையும் 2 அடி முதல் 3 அடி முதல் வளர்ந்து, பூமியில் கால்தடமும் பதித்துவிட்டது. பனைமரங்கள் வளர ஆரம்பித்தவுடன், கிராமங்களின் தோற்றமே மாறும். வெயிலில் நிழல், மழையில் ஆறுதல், நிலத்தில் நீர் பிடிப்பு, என எல்லாவற்றுக்கும் ஆசி வழங்கும்.
பனை மரத்தின் நுனி மு தல் அடி வேர் வரை எல்லாமே கற்ப விருட்சம் தான்.பனைமரங்கள் மனிதர்களுக்கு மட்டும் பயன் தரக்கூடியது அல்ல. எறும்பு , பூச்சி, வண்டு, ஓணான், மரப்பல்லி, ஆந்தை, வவ்வால், குருவி என அனைத்து உயிர்களுக் கும் வாழ்விடமாக மாறும்.
இதனால் பனைமரங்கள் மீட்டெடுப்பினால், புதுச்சேரியின் உயிர்பன்மய சூழலும் மாறும். மண்ணில் மண்ணை சார்ந்த மரங் கள் தான் இருக்க வேண்டும் என்றார் அழுத்தமாக...
வனத் துறையின் முயற்சியால் பனைவிதைகள் குழந்தைகளாக உயிர் பெறுகிறது. அவை வளர்ந்து, வானத்தை தழுவி, புதுச்சேரியின் எதிர்கால சந்ததிகளுக்கு பரிசாக மாற, நாமும் நம் பகுதிகளில் கரம் சேர்ப்போமே....
-நமது நிருபர்- '