/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் அமைச்சர் கண்ணனுக்கு புதுச்சேரி சட்டசபையில் புகழாரம்
/
முன்னாள் அமைச்சர் கண்ணனுக்கு புதுச்சேரி சட்டசபையில் புகழாரம்
முன்னாள் அமைச்சர் கண்ணனுக்கு புதுச்சேரி சட்டசபையில் புகழாரம்
முன்னாள் அமைச்சர் கண்ணனுக்கு புதுச்சேரி சட்டசபையில் புகழாரம்
ADDED : பிப் 23, 2024 03:33 AM
புதுச்சேரி: முன்னாள் அமைச்சர் கண்ணனுக்கு சிலை வைக்க வேண்டும்; அவரது பெயரை பள்ளி, வீதிக்கு சூட்ட வேண்டும்' என, சட்டசபையில் கோரிக்கை வைக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டசபை நேற்று காலை கூடியதும், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவு குறித்த இரங்கல் தீர்மானத்தை முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்தார்.
தொடர்ந்து, மறைந்த வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன், மேல்மருவத்துார் சித்தர் பீடம் பங்காரு அடிகளார், கம்யூ., தலைவர் சங்கரய்யா, தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் செல்வம் வாசித்தார்.
முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவு குறித்த இரங்கல் தீர்மானத்தில் எதிர்கட்சி தலைவர் சிவா பேசும்போது, 'புதுச்சேரி அரசியலில் முத்திரை பதித்த கண்ணனின் நினைவாக அவரது பெயரை பள்ளி மற்றும் வீதிக்கு சூட்ட வேண்டும். அவருக்கு சிலை வைக்க வேண்டும்' என்றார்.
அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, 'புதுச்சேரி அரசியலில் ஆளுமை செலுத்திய கண்ணன், தொண்டர்களையும், மக்களையும் ஈர்க்கும் தலைவராக திகழ்ந்தார்.
புதுச்சேரி அரசியலை நிர்ணயிக்கும் தலைவராக, இளம் தலைவர்களுக்கு உதாரணமாக இருந்தார்.
தனது நிர்வாகத் திறமையால் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றினார். புறம்போக்கு இடங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க ஒருமுறை ஒழுங்குப்படுத்தும் திட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தார்.
அவருக்கு சிலை வைப்பது குறித்தும், அவரது பெயரை சூட்டுவது குறித்தும் முதல்வர் பரிசீலிக்க வேண்டும்' என்றார்.
காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன், சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு ஆகியோரும் கண்ணனின் பணிகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, சபையில் அனைவரும் எழுந்து நின்று, மறைந்த தலைவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.